Tamilnadu
சமூகநீதி போராளிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: யார் அந்த 21 பேர்? - முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?
தமிழ்நாட்டில் கடந்த 1987ஆம் ஆண்டு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வன்னியர் சமூகத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் அடக்குமுறையை கையாண்டனர்.
அந்தப் போராட்டத்தின்போது, பாப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பாப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பேர் கொல்லப்பட்டனர்.
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பலியானோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம், அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்டவை வழங்கப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில், 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கோரி வடதமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில், அன்றைய அரசின் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள் 21 பேர்.
அத்தகைய தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையினுடைய துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையிலே, ரூபாய் 4 கோடி மதிப்பீட்டிலே, விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதேபோல், வீரமரணம் அடைந்த 21 சமூகநீதிப் போராளிகளின் குடும்பத்தாருக்கு அரசு சார்ந்த நிறுவனங்களில், கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, கழக ஆட்சிக் காலத்திலே, 21 தியாகிகளின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அவர்களது குடும்பத்தினருக்கு பென்ஷன் தொகையாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் நான் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இத்தகைய அறிவிப்பைக் கொண்டாடும் விதமாக விழுப்புரம் மாவட்ட தி.மு.கவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அதேபோல் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகியர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது மற்றும் அரசு வேலை வழங்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!