Tamilnadu

நடைபயிற்சிக்கு வரும்போது வாகனங்களை திருடும் பலே ‘வாக்கிங் கொள்ளையன்’ : போலிஸில் சிக்கியது எப்படி?

திருப்பூர் காவலர் குடியிருப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருடுபோனது. இது குறித்து போலிஸில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து திருப்பூர் பேருந்து நிலையம் அருகிலும் இருசக்கர வாகனம் காணாமல் போனது. இந்த இரண்டு இடங்களிலிருந்தும் சி.சி.டி.வி காட்சிளை போலிஸார் ஆய்வு செய்தபோது ஒரே நபர்தான் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து துணை ஆணையர் ரவி தலைமையில் சிறப்புத் தனிப்படை போலிஸார் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் காலையில் நடைப்பயிற்சிக்கு வரும் நபர் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர் போலிஸார் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பெயர் ராஜ்குமார் என்று தெரியவந்தது. மேலும் சட்டம் படித்த இவர் வேலைகளுக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இவர் தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு வரும்போது ஏதாவது ஒரு வாகனத்தைத் திருடிச் சென்று, அந்த வாகனத்தை வைத்து ஆக்டிங் டிரைவராக வேலை செய்வதை வழக்கமாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜ்குமாரை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நடைப்பயிற்சிக்கு வருபவர் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திருநங்கையான தம்பி.. வீட்டிற்கு அழைத்து வந்து கொன்ற அண்ணன் - சேலம் அருகே பயங்கர சம்பவம்!