Tamilnadu

ரூ.625 கோடி மதிப்பில் 8905 புதிய மின்மாற்றிகள்.. முதற்கட்ட பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, (29.8.2021) சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் தமிழ்நாட்டில் மின் பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்க்க 625 கோடி ரூபாய் மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மேலும், கொளத்தூர் தொகுதியில் லோகோ செட் காந்தி நகர், ஜி.கே.எம். காலனி 25வது தெரு, ஜி.கே.எம் காலனி 30வது தெரு, வி.வி.நகர் 2வது தெரு, பூம்புகார் நகர் 1வது மெயின் ரோடு மற்றும் யுனைடெட் காலனி 2வது தெரு ஆகிய 6 இடங்களில் வளைய சுற்றுத்தர அமைப்புடன் கூடிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அதனை இயக்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், சில மின்மாற்றிகளில் அதிக மின்பளுவும், சில மின்மாற்றிகளில் கடைமுனை பகுதிகளில் உச்ச நேரங்களில் குறைந்த மின்னழுத்த குறைபாடும் ஏற்படுகிறது. மேலும், சில இடங்களில் மின்பாதைகளின் நீளம் அதிகமாக உள்ளதாலும், பல நுகர்வோர்கள் அந்த மின்பாதையில் இருந்து ஒரே நேரத்தில் மின்சாதனங்களை பயன்படுத்துவதாலும் கடைமுனை மின் நுகர்வோருக்கு குறைந்த மின்னழுத்த குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

மேற்கண்ட குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து மின்பகிர்மான வட்டங்களிலும் மின்பளுவை குறைப்பதற்கு 5,705 கூடுதல் மின்மாற்றிகளும், குறைந்த மின்னழுத்தத்தை சீர்செய்ய 3,200 கூடுதல் மின்மாற்றிகளும், என மொத்தம் 8,905 மின்மாற்றிகளை 625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்கள். நான்கு மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மின்பளுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் மின்மாற்றியின் சுமை குறைக்கப்பட்டு அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின் விநியோகம் வழங்கப்படும்.

Also Read: “பெற்ற குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய தாய் கைது” : காவல்துறை அதிரடி - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?