Tamilnadu
கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் : விடைகாண முடியாத அடுக்கடுக்கான கேள்விகள் - மர்மங்கள் விலகுமா?
“புதிய தலைமுறை தொலைக் காட்சி” நேற்று (27.8.2021) கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு சம்பவம் குறித்து - “அடுக்கடுக்காக எழும் கேள்விகள்” என்ற தலைப்பில் ஒளிபரப்பிய சிறப்பு செய்தி வருமாறு:-
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் புதிய தலைமுறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணை அதிகாரியான கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளர் பாலசுந்தரத்தின் வாக்குமூலம்தான் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சூளூர் வட்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜன், காலை 7.30 மணிக்கு அழைத்து கூறிய போது தான், தனக்கு இந்தச் சம்பவம் தெரியவந்தது என விசாரணை அதிகாரி பாலசுந்தரம் கூறியுள்ளார். ஆனால் சம்பவம் நடந்த அன்று காலை 7.15 மணிக்கே தடயவியல் துறை அதிகாரிகள் அங்கு சென்றது எப்படி?
இத்தனை முக்கிய வழக்கில் தனது உயரதிகாரியான காவல் ஆய்வாளருக்கு ஏன் தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது? - என்ற கேள்வி எழுந்துள்ளது!
குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வாகனங்கள், கேட் பகுதிகளைப் போட்டோ எடுத்ததாகக்கூறும் காவல் ஆய்வாளர், ஏன் பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் எந்த போட்டோவும் எடுக்கவில்லை? - என்ற கேள்வி எழுகிறது!
சம்பவம் நடந்த பங்களாவில் முழுமையாக ஆய்வு நடத்த வில்லையா? அல்லது பதிவு செய்யவில்லையா? - என்ற கேள்வி எழுகிறது!
சம்பவம் நடந்த அன்று சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகாதது, மின் தடை ஏற்பட்டது குறித்து விசரணை அதிகாரி ஏன் எந்த விசாரணையும் நடத்தவில்லை?
சி.சி.டி.வி கேமராக்களை ஆப் செய்த தினேஷிடம் விசாரிக்க வில்லையா? அல்லது விசாரணை தகவல்களை பதிவு செய்ய வில்லையா? - என்ற கேள்வி எழுந்துள்ளது!
சம்பவம் நடந்த அன்று தாக்குதலுக்குள்ளான நபரிடம் மட்டும் புகார் மனு பெறப்பட்டது. கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பங்களா மேலாளரிடம் ஏன் புகார் பெறவில்லை? அல்லது அவர் புகார் கொடுக்க மறுத்தாரா? - என தெளிவாக பதிவு செய்யப்படவில்லை!
கொள்ளை நடந்த பங்களாவில் என்னென்ன இருந்தன? அதில் என்னென்ன காணாமல் போனது என்பது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை? அல்லது பதிவு செய்யப்படவில்லையா? - என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொடநாடு பங்களாவில் மொத்தம் 14 கேட்டுகள் இருக்கையில், சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட வெறும்ன்3 கேட் பகுதிகளை மட்டும் ஆய்வு செய்தது ஏன்? - என்ற கேள்வி எழுந்துள்ளது!
கொடநாடு பங்களாவில் 20க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் இருந்த நிலையில் அன்றைய தினம் மட்டும் குறைவாக பாதுகாவலர்கள் இருந்ததற்கான காரணம் என்ன?
குற்றச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணத்தில் விசாரிக்கப்படவில்லை என்றும், அரசியல் கோணத்தில் மேலோட்டமாகத்தான் விசாரித்தேன் என விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இந்த வழக்கை ஏன் இத்தனை அலட்சியமாக விசாரித்தார் என்பதற்கு தகுந்தபதிலை விசாரணை அதிகாரி ஏன் வழங்கவில்லை? - என்ற கேள்வி எழுந்துள்ளது!
அதிமுக்கியத்துவம் வாய்ந்த வீடுகளில் வருகைப் பதிவேடு இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பங்களாவில் வருகை பதிவேடு இருந்ததா? அது விசாரணைக்கு கைப்பற்றப்பட்டதா? - என்பது குறித்து விசாரணை அதிகாரி தெரிவுப்படுத்தவில்லை!
சம்பவம் நடந்த அன்று குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் கூடலூர் சோதனைச் சாவடியில் மறிக்கப்படுகின்றனர். அவர்களை அ.தி.மு.க. வர்த்தகப் பிரிவுச் செயலாளராக இருந்த சஜீவனின் சகோதரர் சுனில் என்பவரை நேரில் சென்று மீட்டு அனுப்பி வைத்தது உண்மை என ஒப்புக்கொண்ட அதிகாரி ஏன் அவரிடம் விசாரணை நடத்த வில்லை? என்பது புரியாத புதிராக உள்ளது!
-இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள இந்த வழக்கில் இன்று (நேற்று) நடைபெறவிருக்கும் நீதிமன்ற விசாரணையில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!