Tamilnadu

“எனது தாத்தா அங்கு வசித்ததில்லை”: பென்னி குக்கின் பேரன் Email-ல் விளக்கம் - தவிடுபொடியான பொய் பிரச்சாரம்!

மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுக் வசிக்கவில்லை என அவரது பேரன் லண்டனிலிருந்து இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

மதுரை நத்தம் சாலையில் 70 கோடி மதிப்பில், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், எட்டடுக்கில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு அதற்குரிய பணிகள் நடைபெறத் தொடங்கிய நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் வாழ்ந்த இடத்தில் நூலகம் கட்டுவதாக சர்ச்சையை எழுப்பினர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், 1911இல் பென்னிகுக் மறைந்தார். ஆனால் 1912ல் இந்த கட்டிடம் கட்டப்பட்டது என்றும் இங்கு பென்னி குக் வாழ்ந்ததில்லை என விளக்கம் அளித்திருந்தார்.

எனினும் சட்டமன்றத்திலும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.கவினர் தவறான பிரச்சாரத்தை செய்வதைச் சுட்டிக்காட்டி, ஆதாரம் இருந்தால் நிச்சயமாக அதை மாற்றத்தயாராக இருக்கிறோம் என்றார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பதிலளித்தபோது உறுப்பினர் தவறான தகவலைக் கூறக்கூடாது, 1911ஆம் ஆண்டு பென்னிகுக் மறைந்துவிட்டார். அந்த இடம் 1912 முதல் 1915க்குள் கட்டப்பட்டது. இறந்தபிறகு எப்படி அங்கு அவர் வாழ்ந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் உள்ளிட்டோர் விரிவாக விளக்கம் அளித்து ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள் என தெரிவித்திருந்த நிலையில் , சந்தன பீர் ஒலி என்ற லண்டன் வாழ் தமிழர் இதுகுறித்து பென்னிகுக்கின் பேரன் ஸ்டூவர்ட் சாம்சனிற்கு இமெயில் மூலம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஸ்டூவர்ட் சாம்சன், தமக்குத் தெரிந்தவரை மதுரையில் இந்த இடத்தில் தங்கள் சார்பாகவோ தங்கள் குடும்பத்தினர் சார்பாகவோ எந்தவொரு கட்டிடமும் கட்டப்படல்லை, அப்படியே பொது நிதியில் கட்டப்பட்டிருந்தாலும் அது அந்த நிர்வாகத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தார்.

பென்னிகுக் 1911ல் மறைந்ததும் அந்த இடத்தில் அவர் வசிக்கவில்லை என்பதும் இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அ.தி.மு.கவினரின் பொய் பிரச்சாரமும் தவிடுபொடியாகியுள்ளதால், பிரமாண்டமாக கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்” : அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!