Tamilnadu

ஐ-லீக் கால்பந்து தொடருக்கு தேர்வு... Neroca FC கிளப்பிற்காக விளையாடும் இன்பன் உதயநிதி!

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான தொழில்முறை கால்பந்து தொடரான ஐ-லீக் கால்பந்து தொடர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 21 கிளப் அணிகள் பங்கேற்று வருகின்றன.

2020-2021 ஆண்டிற்கான ஐ-லீக் தொடரை கோகுலம் கேரளா எஃப்.சி அணி வென்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஐ-லீக் தொடருக்கான வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன.

நெரோகா எஃப்.சி (North East Re-Organising Cultural Association Football Club) அணி தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தக் கால்பந்து கிளப்பின் தலைமையிடம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது.

இதுதொடர்பாக நெரோகா கால்பந்து கிளப்பின் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நெரோகா அணியின் வீரர்கள் தேர்விற்கான ட்ரையல்ஸில் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்பன் உதயநிதி கால்பந்து விளையாட்டில் டிஃபெண்டராக இருந்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எதிர்க்கட்சி தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட விரும்பினேன். ஆனால்...” : உதயநிதி ஸ்டாலினின் அறிமுக உரை!