Tamilnadu
கனகராஜின் சகோதரர் தனபாலிடம் 1 மணி நேரம் விசாரணை.. எடப்பாடி மீது இறுகும் பிடி.. கொடநாடு வழக்கில் பரபரப்பு!
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயானை தொடர்ந்து கனகராஜின் சகோதரர் தனபாலிடம் இன்று உதகையில் போலிஸார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவுக் காவலில் இருந்த ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யபட்டார்.
அந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கோவையைச் சேர்ந்த பேக்கரி மேலாளர் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்புள்ளதாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சயான், வாளையாறு மனோஜ், தீபு, சதீசன், உதயக்குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உள்ளிட்டோர் கொள்ளை சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாகவும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 18 பேரை வழக்கு விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 3 பேரை மட்டுமே விசாரிக்க அனுமதி அளிக்கபட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி போலிஸார் இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் விசாரணை நடத்தப்படும் என்றும் மாவட்ட நீதிபதியிடம் தெரித்தனர்.
அதனையடுத்து நிபந்தனை ஜாமினில் உதகையில் தங்கி உள்ள சயானுக்கு சம்மன் வழங்கப்பட்டு கடந்த 17-ஆம் தேதி சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு கொடநாடு சம்பத்தில் தொடர்பு இருப்பதாக கூறி வரும் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சம்மன் வழங்கப்பட்டு இன்று அவர் உதகையில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் நீலகிரி மாவட்ட எஸ்.பி ஆசிஸ் ராவத் உள்ளிட்ட போலிஸார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். அப்போது 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் தனபாலிடம் கேட்கப்பட்டு போலிஸார் பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வரும் 27-ஆம் தேதி வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதீமன்றத்தில் வர உள்ள நிலையில் போலிஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவது வழக்கின் போக்கை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!