Tamilnadu

"பயம் இல்லை, ஆனால் சட்டப்பேரவையில் விவாதிக்க மாட்டோம்" : கொடநாடு கொலை விவகாரத்தில் பதறும் ஜெயக்குமார்!

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளி சயான் அளித்த வாக்குமூலத்தால் இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் அடிபடுவதால் வேண்டுமென்றே தங்கள் மீது பழிபோடப்படுவதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூறிவருகின்றனர்.

இதற்கிடையே கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், இந்த வழக்கு சட்டத்திற்கு உட்பட்டுத்தான் விவாதிக்கப்பட்டு வருகிறது, யாரையும் அச்சுறுத்தவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், "கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அ.தி.மு.கவுக்கு இல்லை. மரபை மீறி கொடநாடு எஸ்டேட் விவகாரத்தைச் சட்டப்பேரவையில் விவாதிப்பதா? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல்" எனத் தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்கள், முதலில் நீங்கள் தானே சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரத்தைப் பற்றிப் பேசி வெளிநடப்பு செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஜெயகுமார், எங்கள் உரிமையை நாங்கள் சட்டமன்றத்தில்தானே பேச முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

அப்படியெனில், சட்டமன்றத்தில் கொடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டியது தானே. பின்னர் ஏன் விவாதிக்காமல் எதிர்க்கிறீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொடநாடு விவகாரத்தின் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஜெயலலிதாவுக்கு இந்த ஆட்சியில் நீதி கிடைக்கும்; உண்மை விசுவாசிகள் அஞ்சமாட்டார்கள்”: காங்கிரஸ் MLA பேச்சு!