Tamilnadu

பெற்றோர் வாங்கிய கடனால், மகள்களுக்கு நேர்ந்த கொடுமை : ஆரணியில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி அஞ்சுகம். இந்த தம்பதிக்கு ரித்விகா, ரிஷ்கா, சத்விகா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கூலி வேலை செய்து வரும் ரகு, உறவினரான கேஷ்டிராஜா என்பவரிடம் கடந்த 18ஆம் தேதி ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். கொரோனா தொற்றால் ரகுவிற்கு தொடர்ந்து வேலைகள் கிடைப்பதில் சிரமம் இருந்தது.

இதனால், வாங்கிய கடனுக்காக வட்டியைக் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் கடன் கொடுத்த கேஷ்டிராஜா கடனை திருப்பித் தருமாறு தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கேஷ்டிராஜா கடனை கேட்பதற்காக ரகு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ரகுவும், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் இவர்களது மூன்று மகள்கள் மற்றும் உறவுக்கார பெண் ஒருவர் இருந்துள்ளார்.

கடனை திருப்பி கொடுக்காத ரகுவை பழிவாங்க வேண்டும் என நினைத்த கேஷ்டிராஜா, நான்கு பேரையும் வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து மகள்கள் பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ரகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கேஷ்டிராஜாவை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூட்டை உடைத்து குழந்தைகளை போலிஸார் மீட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: உஷார் மக்களே... "தேர்வு எழுதணும்.. ஒரு நம்பர் மாறிடுச்சு என பேசினால் நம்பாதீங்க" : போலிஸ் எச்சரிக்கை!