Tamilnadu

கொடநாடு கொலை - கொள்ளையின் போது என்ன நடந்தது? : சம்பவத்தில் ஈடுபட்ட சயானின் விரிவான வாக்குமூலம்!

முன்னாள் முதலமைச்சர் அம்மா, அம்மா என கூறிவிட்டு அவருக்கே குழிப்பறிக்கும் வகையில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் தனது ஆட்களை ஏவி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார் என பகிரங்கமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு பங்களாவில் நடந்த குற்றச்செயல்கள் மீதான வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றம் சாட்டப்பட்டவராக கருதப்படும் சயானிடம் கோத்தகிரி போலிஸார் சுமார் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அதில், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பெயரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், அவருக்கு பல்வேறு வசதிகளை கூடலூரைச் சேர்ந்த அ.தி.மு.க வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன் செய்து தந்ததாகவும் சயான் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இவை அனைத்தும் முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சயான் அளித்த பேட்டியின் விவரங்களும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதில், கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்குள் யார் யாரெல்லாம் சென்று கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபட்டது குறித்து தெரிவித்திருப்பார்.

Also Read: கொடநாடு கொலை - கொள்ளை என்றதும் இ.பி.எஸ்-க்கு ஏன் இந்தக் குலை நடுக்கம்? : அவிழும் மர்ம முடிச்சுகள் !

சயான் பேட்டி விவரம் பின்வருமாறு:

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரும் எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜ் மற்றும் கூடலூரைச் சேர்ந்த மர வியாபாரியும் அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவனின் ஏற்பாட்டின் பேரிலேயே கொடநாட்டில் கொள்ளை அரங்கேறியது.

சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், கொடநாடு பங்களாவில் நுழைவதற்காக 11 பேருடன் சென்று நோட்டமிட்டோம். பின்னர் காவலாளியை கயிற்றால் லாரியில் கட்டி வைத்துவிட்டு நான், கனகராஜ் உட்பட நான்கு பேர் மட்டுமே சம்பவத்தன்று பங்களாவுக்குள் நுழைந்தோம்.

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அறையை காட்டி பூட்டை உடைக்கச் சொன்ன கனகராஜ் அங்கு பீரோவில் இருந்து ஆவணங்களை எடுத்தார். ஆனால் எந்த பணமும் நகையும் எடுக்கவில்லை. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இந்த கொள்ளை எனக் கூறி சேலத்துக்கு விரைந்தார் கனகராஜ்.

இந்த கொள்ளைக்காக ரூ.5 கோடி தருவதாக கனகராஜ் கூறியிருந்தார். ஆனால் ஆவணங்களை கைகளுக்கு வந்ததும் கொள்ளையடித்தவர்களை திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்கள். அந்த விபத்தில் நான் தப்பித்திருக்காவிட்டால் இந்த உண்மைகள் ஏதும் வெளி வந்திருக்காது.

மேலும் கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததே எடப்பாடி பழனிசாமி தரப்புதான் காரணம். இந்த கொடநாடு வழக்கு விவகாரத்துக்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுமுதற் காரணம் என்று நிச்சயமாக கூறுகிறேன். அப்படி அவருக்கு தொடர்பில்லை என்றால் சிபிஐ விசாரணைக்கு மாற்றட்டும்.

இவ்வாறு சயான் தெரிவித்திருக்கிறார்.

Also Read: அடுத்தடுத்து 4 மரணங்கள்.. கொடநாடு கொலை,கொள்ளை விவகாரத்தில் அவிழும் முடிச்சுகள்: புதிதாக தனிப்படை அமைப்பு!