Tamilnadu

“‘ஆகமம்’ பின்னால் இருப்பது ‘ஆரியமே’.. சு.சுவாமி மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது” : முரசொலி !

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 19, 2021) தலையங்கம் வருமாறு:

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தின் அடிப்படையில் தகுதியும், திறமையும், அதற்கான பயிற்சியும் பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

‘கோவில்கள் ஆகம விதிப்படி நடக்க வேண்டும் என்பதைப் போலவே வர்ணா சிரமத்துக்கு வழிவகை செய்வதாக இருந்து விடவும் கூடாது’ என்று சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அந்த அடிப்படையில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை மனதில் கொண்டுதான் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டும் வருகிறது.

இதைப்பார்த்து நேரடியாகக் கொந்தளிக்க முடியாத தினமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் சுப்பிரமணியம் சுவாமியின் பேட்டியைப் போட்டு அவரது முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ‘ஆகம விதி மீறப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வேன்’ என்று சு.சுவாமி சொல்லி இருக்கிறார். ‘இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் அரசல்ல இது’ என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. சுப்பிரமணியம் சுவாமி எந்த உச்சநீதிமன்றத்தைச் சொல்கிறாரோ அந்த உச்சநீதிமன்றமே, தமிழ்நாடு அரசின் அனைத்துச் சாதியினரும் சட்டத்தை அங்கீகரித்து விட்டது.

14.3.1972 ஆம் நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “கோவில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட விரும்பவில்லை. எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியானதே’’ என்று கூறப்பட்டது. 16.12.,2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்துவாகப் பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறப்பட்டது. இந்த அடிப்படையில் பார்த்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நியமனமே உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தால்தான் நடந்திருகிறது.

இது தொடர்பாக பேட்டி அளித்த சுப்பிரமணியம் சுவாமி, “அர்ச்சகர் விவகாரத்தில் என்னைப் பொறுத்தவரையில் பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை. யாருக்கு வேதம் குறித்த படிப்பு ஞானம், நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வரலாம்’’ (தினமணி) என்றுதான் சொல்லி இருக்கிறார்.

சுப்பிரமணியம் சுவாமி சொல்லும்படி ஞானமும், நம்பிக்கையும் உள்ளவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். 2007-2008 கல்வி ஆண்டில் வேத ஆகம பயிற்சி பெற்றவர்கள் 207 பேர். அதில் 24 பேர் நேர்முகத் தேர்வுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 23-5-2006 அன்று தி.மு.க அரசால் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது.

பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

அந்த ஒன்றரை ஆண்டு காலப் பயிற்சியில் தமிழில் ஆகம முறைப்படி பயிற்சி தரப்பட்டது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட மந்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எல்லா கடவுளுக்கும் பூஜை செய்யும் முறைகள் தமிழ் ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டன. சமஸ்கிருத ஆகம முறைப்படியும் பயிற்சி தரப்பட்டது. தங்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்பட்டது என்பதை சென்னையில் பேட்டி அளித்த தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க தலைவர் வா.அரங்கநாதன் விரிவாகக் கூறி இருக்கிறார்.

அரசு விதிப்படி முறையான அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று இருந்தால் அர்ச்சகர் ஆவதற்கு ஒருவர் தகுதி உடையவர் என்று இருக்கிறது. அதன்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அரசு விதிப்படி, வயது வரம்பு 35 ஆகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் விதி மீறல் எதுவும் இல்லையே? இப்படி வேலைக்கு எடுக்கப்பட்டதால் வேறு யாராவது வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. 60 வயதுதான் உச்சவரம்பு.

அதை மீறி 72 வயது வரையிலும் இருப்பவர்களையும் நீக்காமல் உபகோவில் பணிகள்தான் தரப்பட்டுள்ளது. உரிய வயதைத் தாண்டி ஒரு ஊழியர் வங்கியில் பணியாற்றினால் விட்டு விடுவார்களா? கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போது அதற்கு உரியவர்கள் அந்தப் பணியைச் செய்ய அனுமதிக்கப்படுவதுதானே முறையானது!

‘தினமலர்' நாளிதழ் பக்கம் பக்கமாக எடுத்து வெளியிடும் பேட்டிகளில் கூட அர்ச்சகர்கள் என்ன பேட்டி தருகிறார்கள்?’ உடனே நியமிக்கக் கூடாது, உரிய பயிற்சி தந்து நியமிக்கலாம்’ என்கிறார் மாதவ பட்டர். அப்படித்தான் அரசு நியமித்துள்ளது. ‘வேளாளர் சமூகக் கோவிலில் அவர்கள் சமூகத்தவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்களே' என்கிறார் பாலாஜி குருக்கள். ‘குலதெய்வக் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் பூஜை செய்கிறார்கள்' என்கிறார் கொங்கிலாச்சான் அப்பன்னாசி சுவாமி. அதைத்தான் அரசு தனது கொள்கை முடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது அரசின் கொள்கையானதில் என்ன தவறு?

‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, காலம் காலமாக இருப்பதுதான்’ என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால், புதிதாக எதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ‘நாத்திகர்களுக்கு இதைச் செய்ய என்ன உரிமை உள்ளது?’ என்று ஒருவர் கேட்கிறார். நாட்டை ஆண்ட முதலமைச்சர்களிலேயே பழுத்த ஆத்திகர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமி. இந்து சமய அறநிலையத்துறையின் அவர் சில சீர்திருத்தம் செய்த போது அவரையே எதிர்த்த கூட்டம்தான் இந்தக் கூட்டம். எனவே இவர்களது பிரச்சினை ஆத்திகர் - நாத்திகர் என்பது அல்ல. தங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ‘நாத்திகர்கள்' சொல்லி எதிர்ப்பதுதான் காலம் காலமாக அவர்களது வழக்கம். அதை அன்றும் செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருப்பது ‘ஆரியமே’ தவிர வேறல்ல!

Also Read: ஆக்கிரமிப்பாளர் பிடியில் ஆப்கன்; அச்சுறுத்தும் தாலிபான்கள்.. என்ன செய்யப்போகிறது உலக நாடுகள்? : முரசொலி!