Tamilnadu
“நாட்டின் 75வது ஆண்டு பவளவிழாவில் கொடியேற்றியது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமை” : தினத்தந்தி!
இந்தியா சுதந்திரம் பெற்று 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையும், 50-ம் ஆண்டு பொன் விழாவையும் முதல் - அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் கொண்டாடினார். தற்போது 75வது ஆண்டு பவளவிழா அவரது மகன் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டாடப்பட்டது. நாட்டின் 75வது ஆண்டு பவளவிழாவில் கொடியேற்றியது மோடிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த பெருமை என்று ‘தினத்தந்தி’ நாளேடு 19.8.2021 அன்று ‘மோடிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த பெருமை!’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தினத்தந்தி நாளேட்டில் வெளியான தலையங்கம் வருமாறு :-
வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தொடங்கி 42 கவர்னர் ஜெனரல்கள், வைஸ்ராய்கள் நாட்டை ஆண்டுக்கொண்டிருந்தனர். இந்த 190 ஆண்டுகளாக எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் ரத்தம், வியர்வை சிந்தி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை சந்தித்து, சிறைச்சாலைகளில் கொடுமை அனுபவித்து போராடியதின் விளைவாகத்தான் சுதந்திரம் கிடைத்தது. சும்மா கிடைத்ததல்ல இந்த சுதந்திரம்.
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி உலகமே உறங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில் இந்தியா மிக மகிழ்ச்சியோடு சுதந்திரத்தை பெற்றது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. 75-வது ஆண்டு விழா மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஜனநாயக காற்று குளுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நன்னாளில் தேசிய கொடியை ஏற்றும் பெருமையை பெற்றார். முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு சுதந்திரம் பெற்ற நாளின் நள்ளிரவில் பேசியதை குறிப்பிட்டு, புகழ்மிக்க நூற்றாண்டு கொண்டாடும் வகையில் எல்லோரும் உழைக்கவேண்டும் என்று மோடி பேசியிருக்கிறார். ‘அனைவரும் ஒன்றாக இணைவோம். அனைவரும் உயர்வோம். அனைவரும் வளர்ச்சி அடைவோம். அனைவரும் முயற்சி செய்வோம்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்திருக்கிறார். சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை முதல்-அமைச்சர்கள் ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தது மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதிதான். ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர நாளில் முதல்-அமைச்சரும், ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடி ஏற்றலாம் என்ற கோரிக்கையை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் வலியுறுத்தி, அவரையும் ஏற்றுக்கொள்ளச்செய்து, 1974-ம் ஆண்டு சுதந்திர தினம் முதல் தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர்கள் கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் கருணாநிதிதான் என்பது சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படத்தக்க ஒன்றாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையும், 50-ம் ஆண்டு பொன் விழாவையும் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கொண்டாடினார். தற்போது 75-வது ஆண்டு பவளவிழா அவரது மகன் மு.க.ஸ்டாலினால் கொண்டாடப்பட்டது. இந்த 75-ம் ஆண்டு சுதந்திர தினம் என்பது பல சிறப்புகளை பெற்றது. மதுரைக்கு மகாத்மா காந்தி வந்த நேரத்தில், அங்குள்ள ஏழை தமிழர்களை பார்த்து, அவர்கள் அணிந்திருந்த உடையை கண்டு மனம் வருந்தி, தனது உயர்ரக ஆடையை களைந்து, அரை ஆடையை அணியத்தொடங்கிய 100-ம் ஆண்டு, இந்த ஆண்டு தான். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவது இந்த ஆண்டுதான். மகாகவி பாரதியார் மரணம் அடைந்து, 100 ஆண்டுகள் ஆவதும் இந்த ஆண்டுதான். அந்தவகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக சிறப்பான பெருமையை பெற்றிருக்கிறார். ஏதோ விழா கொண்டாடினோம், கொடி ஏற்றினோம் என்று விட்டுவிடாமல், 75-வது சுதந்திர தினத்தை காலம் என்றென்றைக்கும் நினைவுகூரும் வகையில் ஒரு நினைவு தூணையும் அமைத்து, திறந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மற்றொரு அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்திய விடுதலை போராட்டத்துக்கு தமிழக தியாகிகள் அளித்த பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடும் என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் இப்போதைய சந்ததிகள் மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததிகளும் அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியா முழுவதும் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு தமிழகத்தின் பங்களிப்பை மனதில்கொள்வதற்கு பெரிதும் உதவும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!