Tamilnadu
அடுத்த ஆபரேஷன்.. 10 ஆண்டுகளில் ரூ.76.65 கோடிக்கு சொத்து : கே.சி.வீரமணி ஊழலை பட்டியலிட்ட அறப்போர் இயக்கம்!
அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011 -2021 ஆம் ஆண்டுவரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.65 கோடி மதிப்புக்குச் சொத்து குவித்துள்ளதாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலிஸிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் கொடுத்துள்ள புகாரில், "2011ஆம் ஆண்டு கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.7.48 கோடி ஆகும். பின்னர் 2011-2021 வரை கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.91.20 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல், கே.சி.வீரமணி பெயரில் வாங்கப்பட்டுள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4.,06,27,147 ஆக உள்ளது. அதேபோல் இவரின் உறவினர் கே.ஏ.பழனி பெயரில் ரூ.92.21.593 மதிப்புள்ள அசையும் சொத்து வாங்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோம் டிசைனர் அண்ட் ஃபேப்ரிகேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.15 கோடிக்கு அசையா சொத்து வாங்கப்பட்டுள்ளன. வி.பி.ஆர்.ஹில் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் பெயரில் ரூ.7 கோடி மதிப்புக்குச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஹில்ஸ் திருப்பத்தூர் நிறுவனம் பெயரில் ரூ.6 கோடிக்கு சொத்து வாங்கப்பட்டுள்ளது. அகல்யா, பத்மாசினி பெயரில் ரூ.3.2 கோடிக்கு அசையும் சொத்தும் ரூ.15.9 லட்சத்துக்கு அசையா சொத்தும் வாங்கப்பட்டுள்ளது.
2011 -ல் இருந்து 2021 வரை கே.சி.வீரமணி கடன் தொகையை கழித்த பிறகு சொத்து மதிப்பு ரூ.83.65 கோடியாக உள்ளது. 10 ஆண்டுகளில் கே.சி.வீரமணியின் வருமானம் மூலமான அதிகப்பட்ட சேமிப்பு ரூ.7 கோடியாகும். கடனுக்கு பிந்தைய சொத்து மதிப்பான ரூ.83.65 கேரியில் இருந்து சேமிப்பு கழித்தால் நிகர சொத்து மதிப்பு ரூ.76.65 கோடி ஆகும். பத்திரப்பதிவின் போது வழிகாட்டி மதிப்பைவிடச் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டி கே.சி.வீரமணி மோசடி செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் அசையும் சொத்துகளின் மதிப்பு 10 ஆண்டில் ரூ.43 கோடி அதிகாித்துள்ளது. அவரது குடும்பத்தார் பெயரிலும் பெங்களூரு, சென்னை, திருப்பத்தூரில் சொத்து வாங்கியுள்ளார். மேலும், ஓசூா் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் ஒரு ருபாய் குத்தகை கட்டணத்தில் அவரது நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது. சிப்காட் வழங்கிய நிலத்தில் ரூ.15 கோடியில் ஓசூர் ஹில்ஸ் ஹோட்டலை கே.சி.வீரமணி நிறுவனம் கட்டி உள்ளார்.
மேலும், கே.சி.வீரமணி தனது தாயார் மற்றும் சகோதரி பெயரில் வாங்கி சில மாதங்களுக்கு பின்னர் தன் பெயருக்கு தான பத்திரம் மூலம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்துள்ளார். அதேபோல், தனது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் 2015ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, அதே வருடம் கே.சி.வீரமணியின் ஆர்.எஸ். கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தானமாக மாற்றிக்கொண்டு முறைகேடு செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011ல் வெறும் ரூ.7.48 கோடி இருந்த சொந்த கடந்த பத்து ஆண்டுகளில் வருமானத்திற்கு மீறி ரூ.76.65 கோடிக்கு சட்ட விரோதமாக குவித்துள்ளார். இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தினால் இன்னும் பல கோடிக்கு முறைகேடு ஈடுபட்டிருப்பது கண்டறிய வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?