Tamilnadu
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி நெருப்புக் கடலில் மூழ்கி முத்தெடுத்த பயணம்”: சிலந்தி கட்டுரை!
முதலமைச்சர் தளபதி ஸ்டாலினின் கடந்த நூறு நாட்கள் பயணம்; நெருப்புக் கடலில் மூழ்கி முத்தெடுத்த பயணம்!
முதல்வரே குறிப்பிட்டபடி, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்” - என்ற உறுதிமொழியை அவர் வாசித்தபோது, ஆரவார ஒலிகளை மிஞ்சி ஆம்புலன்ஸ்களின் ‘சைரன்’ ஒலிதான் நாடெங்கும் ஒலித்தன.
உயிர்மூச்சைப் பிடித்து வைக்க ஆக்சிஜன் இல்லை எனும் நிலை, மருத்துவமனைகளில் படுக்கை இல்லாது நோயாளிகளை ஏற்றி வந்தவர்கள் கைபிசைந்து நின்ற காட்சிகள் -உடனடி மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இல்லாது மருந்தகங்களைத் தேடி மக்கள் இங்குமங்குமாக அலைந்த அவலங்கள்.
‘போதுமான மருந்துகள் இல்லை’ ‘என் கணவர் மூச்சுத் திணறுகிறார்’ ‘என் மனைவி சுவாசிக்கத் தவிக்கிறார்’ “அப்பாவை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம்; ஆனால் அங்கே ஆக்சிஜன் இல்லை, எங்காவது கிடைக்குமா? உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா? மருந்து கொண்டு வரச்சொல்கிறார் மருத்துவர், எங்காவது ஏற்பாடு செய்ய முடியுமா?”- இதுபோன்ற அபயக் குரல்கள் எங்கும் எதிரொலித்த நிலை.
ஒரு பக்கம் தொற்றின் தாக்கம் படுவேகமாக அதிகரிக்கிறது. சுடுகாடுகள்- இடுகாடுகளில் எரிக்கவோ புதைக்கவோ இடமின்றி - இறந்த உடல்கள் கியூவில் காத்து நிற்கின்றன.
Acid Test - அதாவது, அமில சோதனை என்பார்களே - அத்தகைய பயங்கர சோதனை! இந்த நிலையில் இரும்பு மனிதர்களே துவண்டுபோவார்கள்! ஆனால் நமது முதல்வரோ எழுந்து நின்றார்! சோதனை நெருப்புதான் சாதனைகளைப் புடம் போடுகிறது! ஆம்; இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, ‘நான் இன்று புதிதாகப் பிறந்திருக்கிறேன்’ எனத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர், புதிதாக மட்டுமல்ல, அரிதாகப் பிறந்திருக்கிறார் என அவரது ஒவ்வொரு அசைவுகளும் கட்டியம் கூறின.
அவர் செயல் வேகம் கண்டு, புயல் வேகம் புறமுதுகிட்டு ஓடியது... இந்த அமைதியான உருவத்தின் உள்ளே இத்தனை ஆவேசமா?- என அதிரும் வண்ணம் ‘கொரோனா’வைக் கட்டுப்படுத்த அடுக்கடுக்கான முயற்சிகள்! அமைச்சர்கள் - அதிகாரிகள் -மருத்துவர், ஏன்; ஒட்டுமொத்த ஆட்சி இயந்திரமுமே கொடுந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க இயக்கப்பட்டது!
‘வார் ரூமூக்கு’ நள்ளிரவில் முதல்வர் வருகை... நேரடியாக அழைப்பாளிகளிடம் அவரே பேசினார்! என்பன போன்ற செய்திகள், அரசு இயந்திரத்தை அசுரவேகத்தில் செயல்பட வைத்தன! எந்தநேரத்தில் எப்போது வருவாரோ... முதல்வர்...- என எச்சரிக்கை உணர்வோடு சுழல ஆரம்பித்தது அரசு நிர்வாகம்!
அதிகாரிகள் கூட்டத்தில், “பொய்யுரை, புகழுரை தேவையில்லை. உண்மை நிலையைக் கூறுங்கள்... மக்களிடம் எதையும் மறைக்காதீர்கள்” என உரை நிகழ்த்தி -தன்னை சூழ்நிலைக் கைதியாக்கிவிடாதீர்கள் - எனும் போக்கில், வேண்டுகோளுடன் கூடிய அறிவுரை கூறியபோது, மக்கள் நலனில் அவர் கொண்டிருந்த ஆத்மார்த்தமான ஈடுபாடு வெளிப்பட்டது!
கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களில் கொடுந்தொற்றின் வேகம் அதிகமாகிறது -என்றதும், அங்கே விரைகிறார்! இருக்குமிடத்திலிருந்தே உத்தரவுகள் பிறப்பிக்கும் அளவு விஞ்ஞான வளர்ச்சி அதிகரித்துள்ளதே, ஏன் ‘ரிஸ்க்’ எடுக்கவேண்டும். முதல்வர் இங்கிருந்தே உத்தரவுகளைப் பிறப்பிக்கலாமே - எனப் பலர் கூறிய போதும்- பரிதவிக்கும் மக்களுக்கான சிகிச்சைஅளிக்கப்படும் வார்டுகளுக்கே பாதுகாப்பு உடைகளோடு சென்று பார்வையிடுகிறார்!...
‘முதலமைச்சர் பார்வையிடுவதால் நோயாளிகள் குணம் அடைந்து விடுவார்களா?’ - என்ற கேள்வியை குதர்க்க எண்ணம் கொண்டோர் எழுப்பலாம்; அந்தப் பயணம், பார்வையிடல் இவற்றின் விளைவாக, களப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டனர் என்பது நிதர்சன உண்மை! அதனால், முன்களப் பணியாளர்களில் ஒருவராக தன்னையும் முதல்வர் இணைத்துக் கொள்கிறார்!‘ முதல்வரே வந்து பார்வையிட்டுள்ளார். நமக்கு தரமான சிகிச்சை தரப்படுவதை உறுதி செய்துள்ளார்’ - என்ற மனதைரியத்தில் நோய்வாய்ப்பட்டவர்களின் நம்பிக்கை அதிகமாகிறது.
சேலத்தில் 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உருவாக்கப்படுகிறது! முதல்வர் பார்வையிட வருகிறார் - என்றதும், முழு மூச்சில் வேலை நடத்தப்பட்டு முடிகிறது! கோவை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி, சென்னை என சுற்றிச் சுழல்கிறார் முதல்வர்... அமைச்சர்கள் - மாவட்ட ஆட்சியாளர்கள், அதிகாரிகள் - மருத்துவர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அத்தனை பேரும் களத்தில் இறங்கினர்!
ஆம்புலன்ஸ் ஒலிகள் குறைந்தன -ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகின -கொடும் தொற்றின் படுவேக வீச்சிலிருந்து மக்களைக் காத்திடும் அரணாக - முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் விளங்கி மக்களைக் காத்து நிற்கின்றனர்.
அசுரத் தொற்றின் ஆட்சி அடக்கப்படுகிறது! முற்றிலும் அழியாவிடினும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’... என்று உறுதிமொழி ஏற்ற முதல்வரின் கவனம், முழுவீச்சாக கொடுந்தொற்றினைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பதில் மட்டுமில்லை; சீரழிந்து சிதைந்துவிட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீட்க வேண்டும்... ஒருபக்கம் தொற்றோடு போர்... மறுபக்கம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடும் பெரும் பொறுப்பு! தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலை -கடந்தகால அலங்கோல ஆட்சியால் பற்றாத நிதிநிலை!
இப்படிப்பட்ட நிலையில் வில்லாதி வில்லனும் வீழ்ந்து விடுவான். இவர் எம்மாத்திரம் என எண்ணிய எதிரிகள் முதுகுடைத்திடும் வகையில்
மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லாப் பயண வசதி.
கொரோனா நிவாரண நிதியாக குடும்பம் ஒவ்வொன்றுக்கும் இரு தவணைகளில் 4,000 ரூபாய்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் இலவசம்.
பெட்ரோல் விலையில் ரூபாய் மூன்று குறைப்பு.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்.
விவசாயத்திற்காக முதன்முறையாக தனி நிதிநிலை அறிக்கை.
கோவில்களில் தமிழ் அர்ச்சனைப் பணி, கோவில் சொத்துக்கள் மீட்புப் பணி.
“முதலீட்டாளர்கள் முதல் முகவரி -தமிழ்நாடு” என்ற செயல் திட்டத்தில் 28,664 கோடி முதலீட்டுத் திட்டங்கள்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ -என்ற திட்டத்தின் மூலம் நூறு நாட்களில் குறை தீர்க்கும் பணியை தனி அதிகாரி நியமித்து குறை தீர்த்த செயல்... இப்படி பல பல ஆக்கப்பூர்வச்செயல்கள்... ஒவ்வொரு நாளும் தமிழர் வாழ்வில் விடியல் ஏற்படுத்தும் அறிவிப்புகள்!
காழ்ப்புணர்ச்சி கொண்ட மனிதர்கள் தவிர மற்றவர்கள் அனைவரிடமும் எழும் கேள்வி, “எப்படி முடிகிறது... இந்த மனிதரால் இத்தனையும் செய்துமுடிக்க...?” என்பதுதான்! அத்தனைக்குமான ஒரே பதில்தான், ஆட்சியின் 100 நாட்கள் நிறைவுவிழாவில், சட்டமன்றத்தில் பாராட்டுரைத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்குப் பதிலளித்து முதல்வர் தளபதி ஸ்டாலின் அளித்த பதிலுரை! “இங்கே படமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிற நம்முடைய தலைவர் கலைஞர் கூறியது, என் மனதில் இன்னும் ஆழமாக இருக்கிறது. “சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்”. அவர் இருந்து செய்ய வேண்டியதை அவருடைய மகன் நிச்சயம் செய்வான் என்ற அந்த உறுதியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்”- இது தளபதியின் பதிலுரை அல்ல; அவர் இதயத்திலிருந்து இயக்கிடும் தலைவர் கலைஞரின் உள்ளார்ந்த உரை! ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் - கொல் எனும் சொல்’.- வள்ளுவர் வாக்கு - தமிழக அரசியலில் உயிரோட்டமாக உலா வந்துகொண்டிருக்கிறது!
- சிலந்தி
(முரசொலி 16-8-2021)
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!