Tamilnadu

போராடிய புஜாரா - ரஹானே கூட்டணி.. திரில்லராக மாறப்போகும் இந்தியா - இங்கிலாந்து போட்டி ! #IndvsEng

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. பரபரப்பாக அமையப்போகிற இறுதிநாளுக்கான முன்னோட்டமாக நான்காம் நாள் ஆட்டம் இருந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை எடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். முதல் இன்னிங்ஸில் இவர்கள் இருவருமே பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள். அதில் கற்றுக்கொண்ட படிப்பினைகளை வைத்துக் கொண்டு ஜோ ரூட் நேற்று திட்டங்களை தீட்டியிருந்தார். ட்ரைவ் ஆடி அசத்தும் ராகுலுக்கு பாயிண்ட், கவர், எக்ஸ்ட்ரா கவர், மூன்று ஸ்லிப் என ஃபீல்ட் அமைத்து கட்டம் கட்டினார். அதேநேரத்தில் ரோஹித்துக்கு டீப் ஸ்கொயர் லெக், ஃபைன் லெக் இரண்டுமே வைத்து ஷார்ட் பாலுக்கு கட்டம் கட்டினர். இருவருமே கொஞ்சம் நன்றாகவே இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். ரோஹித் சர்மா சில அசத்தலான கவர், ஸ்ட்ரைட் ட்ரைவ்களை ஆடியிருந்தார். ஆனால், இந்த கூட்டணி முதல் இன்னிங்ஸை போல நிலைத்து நிற்கவில்லை. ராகுல் 5 ரன்களில் மார்க் வுட் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பரான பட்லரிடம் கேட்ச் ஆனார்.

ராகுல் அவுட் ஆன சில நிமிடங்களிலேயே ரோஹித்தும் அவுட் ஆனார். மேலே குறிப்பிட்டிருந்த ஷார்ட் பால் திட்டத்திலேயே அவர் வீழ்ந்தார். மார்க் வுட் தொடர்ந்து ஷார்ட் பாலாக வீசிக்கொண்டே இருந்தார். ஒரு ஷார்ட் பாலை புல் ஷாட் மூலம் சிக்சராக்கிய ரோஹித் மீண்டும் இன்னொரு ஷார்ட் பாலிலும் பெரிய ஷாட்டுக்கு முயன்றார். ஜோ ரூட் தான் ஃபைன் லெக், டீப் ஸ்கொயர் லெகில் அணை கட்டி வைத்திருந்தாரே! சரியாக ஸ்கொயர் லெகில் நின்ற மொயீன் அலியிடம் 30 ரன்களில் கேட்ச் ஆனார்.

கேப்டன் கோலியும் நீண்ட நேரமெல்லாம் நிலைத்து நிற்கவில்லை. ஒரு சில ட்ரைவ்களை க்ளாஸாக ஆடிய கோலி ஆண்டர்சனிடம் கொஞ்சம் வார்த்தை மோதலிலும் ஈடுபட்டார். இந்த ஆவேசத்திலேயே தேவையில்லாமல் பேட்டை விட்டு ஷாட் ஆடிக்கொண்டிருந்தார். சாம் கரன் ஓவர் தி விக்கெட்டில் வந்து 6 வது ஸ்டம்ப் லைனில் வீசிய பந்துக்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். நின்று ஆடியிருக்க வேண்டிய கோலி ஈகோ தூண்டுதலால் 20 ரன்களில் வெளியேறினார்.

சீக்கிரமே டாப் 3 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டம் மொத்தமாக இங்கிலாந்து பக்கம் சாய்வதை போன்று தோன்றியது. இந்நிலையில்தான் அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் புஜாராவும் ரஹானேவும் கூட்டணி அமைத்தனர். இருவருக்குமே பயங்கர நெருக்கடி இருந்தது. தொடர்ந்து மோசமாக ஆடி வரும் இவர்கள் இந்த போட்டியிலும் சொதப்பினால் அணிக்குள் அவர்களின் இடமே கேள்விக்குள்ளாகும் சூழலே இருந்தது. ஆனால், இருவரும் பொறுப்பை உணர்ந்து கொஞ்சம் சிறப்பாக ஆடினர். கிட்டத்தட்ட இரண்டு செஷன்களுக்கு விக்கெட்டே விடாமல் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிகவும் பொறுமையாக செட்டில் ஆகிவிட்டு ஏதுவான பந்துகளை மட்டுமே ஷாட் ஆடினர்.

இவர்கள் இருவருமே நின்று நேற்றைய நாள் ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என நினைத்த போது இருவருமே அடுத்தடுத்து அவுட் ஆகினர். 206 பந்துகளை சந்தித்திருந்த புஜாரா 45 ரன்களில் மார்க்வுட் பந்து வீச்சில் பவுன்சை சரியாக கணிக்காமல் எட்ஜ் வாங்கி ஸ்லிப்பில் நின்ற ரூட்டிடம் கேட்ச் ஆனார். அரைசதம் கடந்திருந்த ரஹானே 61 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார்.

இவர்கள் இருவரும் இவ்வளவு நேரம் நின்றதாலேயே ஆட்டம் 5 வது நாள் வரை சென்று இந்தியாவுக்கும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. ரஹானேவுக்கு பிறகு ஜடேஜாவும் சீக்கிரமே மொயீன் அலியின் பந்துவீச்சில் போல்டை பறிகொடுத்து அவுட் ஆனார்.

நேற்றைய நாள் இறுதியில் இந்திய அணி 154 ரன்கள் முன்னிலை எடுத்திருந்தது. பண்ட்டும் இஷாந்த் சர்மாவும் க்ரீஸில் இருக்கின்றனர். பண்ட் முடிந்தளவுக்கு அதிரடி காட்டி ரன்னை உயர்த்த வேண்டும். இந்திய பௌலர்கள் தங்களுடைய பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். குறிப்பாக ஜோ ரூட்டை சீக்கிரமே வீழ்த்த வேண்டும். அது நடக்கும்பட்சத்தில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் ஒரு பரபரப்பான திரில்மிக்க இறுதிநாள் ஆட்டம் காத்திருக்கிறது.

உ.ஸ்ரீ

Also Read: “தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய பா.ஜ.க தலைவர்” : இதுதான் உங்க தேசபக்தியா? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !