Tamilnadu

“2 ஆண்டுகளாக ரயிலை இயக்கிய போலி ஓட்டுநர்கள்” : போலிஸார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

மேற்கு வங்காளத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சாலிமர் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது, ரயில்வே போலிஸார் சோதனை செய்தனர்.

அப்போது, ரயில் ஓட்டுநர் சீருடையில் இரண்டு வாலிபர்கள் இருந்துள்ளனர். இவர்களிடம் போலிஸார் விசாரணை செய்தபோது, ‘நாங்கள் ரயில் ஓட்டுநர்கள்’ என கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளனர். அப்போது இது போலியான அடையாள அட்டை என போலிஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, போலிஸார் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கோகள்ஷேக் மற்றும் எஸ்ராபில்ஷேக் என்பது தெரியவந்தது. மேலும் ரயில் ஓட்டுநர்களிடம் பயிற்சி பெற்று வாரத்திற்கு இரண்டு முறை ரயில் இயக்கி வந்ததும், இப்படி இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரயில்வே போலிஸார் இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் யார் இவர்களுக்கு ரயிலை இயக்க அனுமதி கொடுத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கி வந்தது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சேவல் சண்டையால் ஏற்பட்ட விபரீதம்” - வாலிபர் குத்தி கொலை: கிருஷ்ணகிரியில் நடந்த பயங்கரம்!