Tamilnadu

சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி.. பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய தி.மு.க அரசின் பட்ஜெட்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு : -

“கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வது இந்த அரசின் முன்னுரிமையாகும். முந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

இத்திட்டத்தின் மொத்தச் செலவு 12,110.74 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது. இதற்காக 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால், அது குறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர்.

கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக, இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதி வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 3 மணிநேரம் தண்ணீர் கூட குடிக்காமல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்!