Tamilnadu
“7 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தி வரலாறு படைக்கிறது தமிழ்நாடு அரசு” : ‘தினத்தந்தி’ நாளேடு புகழாரம்!
தமிழக அரசின் தொல்லியல் துறை ஒரே நேரத்தில் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தி வரலாறு படைக்கிறது என தினத்தந்தி தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.
தினத்தந்தி நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
பண்டைய தமிழர்கள் நாகரிகத்திலும், கல்வியிலும் மட்டுமல்ல, வர்த்தகத்திலும் மேலோங்கி இருந்திருக்கிறார்கள். இதைஉறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் தொடங்கி பல இடங்களில் தொல்லியல் ஆய்வுகளுக்காக பூமியை தோண்டத்தோண்ட பல அரும்பெரும் சான்றுகள் கிடைத்துக்கொண்டே வருகின்றன.
ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை போன்றவற்றை உள்ளடக்கிய தாமிரபரணி ஆற்று நாகரிகம் பண்டைய தமிழர்களின் நாகரிக வாழ்வுக்கு பெரிய ஆதாரமாக அமைந்திருக்கிறது என்று ஒவ்வொரு தமிழரும் பெருமை கொண்டிருந்தநிலையில், புதிய அத்தியாயத்தை படைக்கும் வகையில் வைகை நதிக்கரையோரம் கீழடியில் இப்போது 7-வது கட்டமாக நடந்துக்கொண்டிருக்கும் ஆய்வுப்பணியில் பல அரிய சான்றுகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே வருகின்றன.
2009-ம் ஆண்டு மதுரையை அடுத்த தேனூர் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. அப்போது அதன் அருகே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன், கண்டுபிடித்த மண் கலயங்களுக்குள் தங்க கட்டிகள் பாளம், பாளமாக இருந்ததை பார்த்து எல்லோரும் வியப்படைந்தனர். இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த தங்க கட்டிகளில் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் இருந்தன.
எனவே நிச்சயமாக இந்த பொருட்கள் அனைத்தும் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்துதான், மதுரை-ராமநாதபுரம் சாலையில் சிலைமான் என்ற ஊர் அருகே உள்ள கீழடி கிராமத்தில் முதல் முதலில் ஒரு தென்னந்தோப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கட்டமாக கீழடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது தமிழர்களின் நாகரிகம் உச்சத்தில் இருந்தது தொடர்பான பல சான்றுகள் கிடைக்கப்பெற்றன.
அங்கு தமிழர்கள் வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல இடங்களுடனும் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற சான்றுகள் கிடைத்தன. ஏற்கனவே தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்த தங்க நாணயம், சதுர வடிவிலான செப்பு நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டநிலையில் இப்போது 7-வது கட்ட ஆய்வில் வட இந்திய வெள்ளி நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பு செவ்வக வெள்ளி நாணயம் ஒன்று இதே கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயம் கி.மு. 4-ம் நூற்றாண்டுக்கு முன் வட இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட நாணயமாக இருப்பதால், வட இந்தியாவோடு தமிழ்நாட்டுக்கு வர்த்தக தொடர்பு இருந்து இருக்கிறது.
இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் சூரியன், சந்திரன், காளை மாடு, மற்றொரு கால்நடை, நாய் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அடுத்த பக்கத்தில் அரை வட்டமும், ‘ட’ வடிவிலான 2 எழுத்துகளும் இடம் பெற்றுள்ளன என்கிறார் தொல்லியல்துறை துணை இயக்குனர் ஆர்.சிவானந்தம். கி.மு.4-ம் நூற்றாண்டுக்கு முன் நாணயம் என்பது மவுரிய காலத்துக்கு முற்பட்ட கால நாணயமாக கருதலாம் என்கிறார் அவர். அப்போது இங்கு சங்ககால பாண்டிய மன்னர்கள் ஆட்சி நடந்திருந்தது. ஆக, வட இந்தியாவில் மவுரியர் ஆட்சியிலும், தமிழ்நாட்டில் பாண்டிய மன்னர்கள் ஆட்சியிலும், இருவருக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருந்த வரலாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் தமிழர்கள் பல வெளிநாடுகளோடு வர்த்தகம் செய்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளநிலையில், அதெல்லாம் உண்மைதான். வர்த்தகத்தில் தமிழர்கள் மேலோங்கி நின்றிருக்கிறார்கள் என்பது அகழ்வாராய்ச்சிகளில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு முழுவதுமே நாகரித்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போது ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கீழடி, கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை ஆகிய 7 இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடக்கின்றன.
தமிழக அரசின் தொல்லியல் துறை ஒரே நேரத்தில் 7 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தி வரலாறு படைக்கிறது. இங்குமட்டுமல்லாமல் மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி பண்டைய தமிழர்களின் பெருமையை பறைசாற்றவேண்டும்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !