Tamilnadu

சர்வதேச யானைகள் தினம் : 10 ஆண்டுகளில் 1,000 யானைகள் பலி - காணாமல் போகும் ‘பேருயிர்கள்’ !

கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது. நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசு பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து சென்று ஒரு பகுதியில் இருக்கும் விதையை மற்ற பகுதிக்கு பரப்புவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உள்ளது. அத்தகைய பேருயிரைக் கொண்டாடும் வகையில், இன்று சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

வனகங்களின் பாதுகாவலன் என அழைக்கப்படும் யானைகள் உயிரிழப்பு குறித்து சிறப்பு செய்தி தொகுப்பு:-

கடந்த 2017ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த யானைகள் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 212 யானைகள் இருந்தன. அவற்றில் 10% யானைகள் , அதாவது 2, 761 யானைகள் தமிழகத்தில் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்கள் ஒன்பது வனக்கோட்டங்கள், 4 வன உயிரின சரணாலயங்களில் யானைகள் பரவலாக வாழ்கின்றன. யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துக்கள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

அதேபோல் காட்டு யானைகள் தாக்கி உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் இதற்கு இணையாக உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறைந்துள்ளது.

ஆனால், யானைகள் உயிரிழப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை, சத்தியமங்கலம், நீலகிரி,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு அடிக்கடி உயிரிழந்த வருகிறது. குறிப்பாக, யானை ஆராய்ச்சியாளர்கள் பலரிடம் திரட்டிய தகவல் படி 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரத்து 13 யானைகள் இறந்து உள்ளது.

இவற்றில் 427 ஆண் யானைகள், 575 பெண் யானைகள், அழுகிய நிலையில் உடல் கண்டறியப்பட்டதால் பாலினம் கண்டுபிடிக்க முடியாத யானைகளின் எண்ணிக்கை 16. முதுமை, பிரசவம், வரட்சியால் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை மற்றும் நோய்களால் 310 யானைகள் இறந்துள்ளன. 37 யானைகள் ஆந்தராக்ஸ்க்கு பலியான வையாகும்.

இந்நிலையில், தி.மு.க தலைமையிலான அரசு தனி கவனம் செலுத்தி யானைகள் இறப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காடுகளை அழித்து சிலை வைப்பவர்களுக்கும், தோட்டங்களை பாதுகாப்பதாகக் கூறி மின் வேலி அமைப்பவர்களுக்கும், வளர்ச்சிக்காக யானைகளின் வலசைப் பாதைகளை சூறையாடுபவர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு” : RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்!