Tamilnadu

“மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது.. வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவார்” - நிதி அமைச்சர் விளாசல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த 9ஆம் தேதி வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திசைதிருப்பத்தான் நிதிநிலைமை குறித்துப் பேசுவதாகச் சொல்கிறீர்கள். இருக்கின்ற சூழலை வெளிப்படைத் தன்மையுடன் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை வெளியிட்டனர். ஆனால் அவற்றில் எவை எவை நடந்தன, எவை நடக்கவில்லை என்று தெரியவில்லை. பணம் காணாமல் போனது எங்கே என்று தெரியவில்லை.

நிதி நிலையில் உள்ள தவறான சூழலைத் திருத்தவேண்டும் என்றால் முதலில் தகவல்களைத் திரட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சூழலை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, அதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விவாதம் நடைபெற வேண்டும்.பிறகு நிபுணர்களுடன் ஆலோசித்து திட்டங்களைத் தீட்டி அதனைச் செயல்படுத்துவோம். அதுதான் ஜனநாயக மரபு, வெளிப்படைத்தன்மை,

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1 ரூபாய் கடன் வாங்கினால் 50 பைசா முதலீடு செய்தோம் என்கிறார். பொறுப்புள்ள நிதி மேலாண்மைப்படி வருவாய்க் கணக்கில் பற்றாக்குறையே இருக்கக் கூடாது.

அ.தி.மு.க ஆட்சியில் 3 சதவீத உற்பத்தியில் 1.5 சதவீதப் பற்றாக்குறையை வைத்துவிட்டு 1.5 சதவீதம் முதலீடு செய்தனர். இது எப்படிப் பொறுப்புள்ள மேலாண்மையாக இருக்கும்? எவ்வாறு மக்களுக்கான வளர்ச்சியாக இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போதுசெய்தியாளர் ஒருவர், ‘தமிழ்நாட்டில் அதிக சொத்து வளங்கள் இருப்பதால்தான் கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஒருகோணத்தில் பார்த்தால் இதுவும் வளர்ச்சிதானே’ என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “பலமுறை கூறியுள்ளேன். மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. அநாவசியமாக வாய்க்கு வந்ததை எல்லாம் உளறும் நபர்.

மாஃபா பாண்டியராஜன் 2016ல் சட்டப்பேரவையில் பேசும்போது, ‘நிதி பற்றாக்குறைக்குக் காரணம் 7வது நிதிக்குழுவுக்கு ஊதியத்தை உயர்த்திதுதான்’ என்று பேசினார். இதற்கு மேல் ஒரு அறிவில்லாத நபருக்கு உதாரணம் தேவையா? அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் எங்கோ பெட்டிக் கடையில் உள்ள ஒரு பாட்டிலுக்கும் உள்ள சம்பந்தம்தான் அவருக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ளது. அதாவது சம்பந்தமே கிடையாது.” எனத் தெரிவித்தார்.

Also Read: "RSS அஜெண்டாவை ஏற்காதவர் உயர் பதவிகளுக்குச் செல்லவே முடியாதா?" : UPSC தேர்வுத்தாள் கேள்விகளால் சர்ச்சை!