Tamilnadu

சென்னை வாழ் மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை... மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!

சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் படிப்படியாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் எந்த நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில்‌ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்‌ அமைப்புகள்‌ மற்றும்‌ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின்‌ சார்பில்‌ காவல்துறையுடன்‌ இணைந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில்‌ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்‌ அமைப்புகள்‌ மற்றும்‌ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌. இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ்‌ தொற்றை கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ திருமணம்‌ உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில்‌ 50 நபர்கள்‌ மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்‌ எனவும்‌, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌, விருந்து அரங்கங்கள்‌, சமூக நலக்கூடங்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள்‌ குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதள இணைப்பின்‌ வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்‌ என மாநகராட்சியின்‌ சார்பில்‌ கூட்டங்கள்‌ நடத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்‌, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மே மாதம்‌ 2021 முதல்‌ இதுநாள்வரை கோவிட்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனிநபர்களிடமிருந்து ரூ.370 கோடி அபராதத்‌ தொகை வசூலிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “2 டோஸ் தடுப்பூசி போட்டும் 40,000 பேருக்கு கொரோனா தொற்று” - கேரள அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!