Tamilnadu

லஞ்ச ஒழிப்பு சோதனை... கம்பி நீட்டிய முன்னாள் அமைச்சர்கள்: சோகத்தில் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள்!

அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவருக்குச் சொந்தமான 52 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அரசு ஒப்பந்தங்களைத் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் காலை முதலே தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை செய்தனர். அப்போது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, ராஜராம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.

அப்போது, அங்கிருந்த போலிஸார் அவர்களைக் கலைந்து செல்லும் படி கூறினர். இல்லை என்றால் தடியடி நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். போலிஸாரின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சி.வி.சண்முகம், பாலகங்கா, ராஜராம் மற்றும் அதிமுக தொண்டர்கள் அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராகக் கம்பி நீட்டினர்.

இப்படி முன்னாள் அமைச்சர்கள் முதல், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பதைப்போல் தெரிவித்து பிறகு அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்ற சம்பவம் வேலுமணியின் ஆதரவாளர்கள் மத்தியில் சோகம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காலை பொங்கல், உப்புமா; மதியம் வெஜ் பிரியாணி, ரோஸ் மில்க் : ரெய்டை தடுக்க தொண்டர்களை கவனித்த வேலுமணி!