Tamilnadu

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு : நிதியமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிட்டப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட நிதிப் பின்னடைவுகள் குறித்து வெளிப்படையாக அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், முந்தைய அரசின் தவறான அணுகுமுறைகளினால் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு வருவாய் சரிவு ஏற்படவில்லை.

2020-2021ல் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடியாக உள்ளது. 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016-ல் அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2021-ல அ.தி.மு.க அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு மடங்கு குறைந்துவிட்டது. 2020 - 2021 -ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில், கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமாகியுள்ளது. அதேவேளையில், அ.தி.மு.க ஆட்சியில், தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை.

வருவாய் பற்றாக்குறை இருந்ததால், நிதிப் பற்றாக்குறை பலமடங்கு உயர்ந்துவிட்டது. இதனால், தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது நிதிப் பற்றாக்குறை 4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; மாநிலத்தில் வளர்ச்சி 11.46% லிருந்து 4.4% ஆக சரிந்துவிட்டது.

அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது; மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே போக்குவரத்து துறையில் நஷ்டம் உள்ளது!

Also Read: வெள்ளை அறிக்கை என்றால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்!