Tamilnadu

கடலை கார்ப்பரேட்டுக்குத் தாரை வார்ப்பதா? - ஒன்றிய அரசின் மீன்வள மசோதாவுக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் !

ஒன்றிய அரசு புதிதாக தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா - 2021 நாடாளுமன்றத்தில் அமல்படுத்த உள்ளது. இந்த மசோதாவில் இடம்பெறும் பல விதிமுறைகள் மீனவா்களை ஒடுக்கும் முறையிலேயே அமைந்துள்ளது.

மேலும் கார்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளது என குற்றம்சாட்டி மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டத்தில் கடற்கரையிலிருந்து 12 கடல் மைலுக்கு அப்பால் (22 கி.மீ.) மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது; மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்; படகிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என அந்தச் சட்டம் கூறுகிறது.

மீனவா்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். விதி மீறினால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் குறிப்பிட்ட கடல்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முடியும் இதன் மூலம் பாரம்பரிய மீனவர்கள், மீன் பிடிக்கும் உரிமையை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த மசோதா உள்ளதாக கூறி, இன்று குமரி மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆரோக்கியபுரம் முதல் நீராடி வரையிலான 48 மீனவர்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம்துறை மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடற்கரையில்  மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரைகளில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Also Read: ”மீன்வள மசோதா 2021: மாநிலங்களின் உரிமையை பறிக்கும் திட்டத்தை கைவிடுக” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!