Tamilnadu

"வேலை இல்லை... மனைவி திட்டியதால் போலி உதவி கமிஷனர் ஆனேன்" : விசாரணையில் ‘பகீர்’ கிளப்பிய விஜயன்!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சாலையில் போலிஸார் அண்மையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக போலிஸ் கார் ஒன்று வேகமாக வந்தது.

அப்போது, போலிஸார் கார் ஓட்டிவந்த நபரிடம் நடத்திய விசாரணையில், தன்னை உதவி கமிஷனர் எனக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். அந்த நபரின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலிஸார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளன. போலிஸ் கமிஷனர் என கூறியவர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயன் எனத் தெரியவந்தது. இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.

இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வேறு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் இவரது மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விஜயன் எப்படியாவது வேலைக்குச் சென்று விடவேண்டும் என மனதில் நினைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், இதனால் டி.எஸ்.பி ஆனதாகவும் பொய் சொல்லி மனைவியை நம்பவைத்துள்ளார். பிறகு சில நாட்கள் கழித்து உதவி கமிஷனராக உள்ளதாகவும் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், மனைவியை நம்ப வைப்பதற்காக கோவையில் இருக்கும் நண்பர் ஜெயமீனாட்சி என்பவரின் பெயரில் ஜீப் ஒன்றை வாங்கி, அதை போலிஸ் வாகனமாக மாற்றியுள்ளார். இந்த வாகனத்தில் சென்னையில் போலிஸாக வலம்வந்துள்ளார்.

அடிக்கடி விசாரணைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியூர்களுக்குச் சென்று, பிறகு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவார். பிறகு மீண்டும் விசாரணைக்குச் செல்வதாகக் கூறி சென்றுவிடுவார்.இதை ஒரு வழக்கமாகவே வைத்து வந்துள்ளார். இப்படி செல்லும்போதுதான் விஜயன் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ போலிஸிடம் மாட்டிக் கொண்டார்.

Also Read: “நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே!” : ATM இயந்திரத்திலேயே வசமாக மாட்டிக்கொண்ட வடமாநில திருடன்!