Tamilnadu
தொல்லியல் ஆய்வுகள் வீண் வேலையா? இந்தியாவின் வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்கும் -ரவிக்குமார்MP தக்க பதிலடி
தமிழ்நாட்டில் 1961-ல் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. அதற்கு இது 60-வது ஆண்டு. அதைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஒருபுறம் கோரிக்கை எழுந்து வரும் நேரத்தில், ‘தொல்லியல் ஆய்வுகளே வீண்’ என்ற விமர்சனம் இன்னொரு புறம் முன்வைக்கப்படுகிறது.
1784-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரிதான் கிரேக்க வரலாற்றில் ‘சந்தர கொட்டாஸ்’ என்று சொல்லப்படுவது இந்தியாவை ஆண்ட சந்திரகுப்த மெளரியர் என்ற பேரரசரின் பெயர்தான் என்பதைக் கண்டறிந்து கூறினார். 1886-ல் சென்னை அரசாங்கம் ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. அவர் தஞ்சை பெரியகோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து, இதனைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜனே என முதன்முதலாகக் கூறினார்.
சங்க காலம் என நாம் இப்போது பெருமைப்பட்டுக்கொள்கிற காலத்தை உறுதிசெய்ய 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியப் பிரதிகளுக்கு அப்பால் போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல்லவர் காலத்துக்கு முற்பட்ட வரலாறு குறித்து வரலாற்றாசிரியர்களால் உறுதிபட எதையும் கூற முடியவில்லை. அத்தகைய சூழலில், கல்வெட்டுத் துறையில் மிகப் பெரும் புரட்சியை உருவாக்கியவர் கே.வி.சுப்ரமணிய அய்யர். 1924-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் வாசித்தளித்த கட்டுரையில்தான் ‘தமிழ்நாட்டின் இயற்கையான குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழில்தான் எழுதப்பட்டிருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டார்.
அதுவரை அந்தக் கல்வெட்டுகள் வட இந்தியாவிலிருந்து வந்த பௌத்தத் துறவிகளால் பிராமியிலும் பிராகிருத மொழியிலும் எழுதப்பட்டவை; அவற்றுக்கும் தமிழக வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றுதான் வரலாற்றாசிரியர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். அதை மறுத்து குகைக் கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகளான ழ, ள, ற, ன ஆகியவை இருப்பதையும், தமிழ்ச் சொற்கள் இலக்கணத்தோடு பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சுப்ரமணிய அய்யர்தான் நிரூபித்தார்.
தொல்லியல் துறை உருவானதற்குப் பிறகுதான், இந்திய வரலாற்றையும் தமிழ்நாட்டின் வரலாற்றையும் தெளிவாக எழுதக்கூடிய நிலை உருவானது. அந்தத் துறை மேற்கொண்ட அகழாய்வுகளும், அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளும்தான் நம்முடைய வரலாற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு வழிவகுத்தன.
ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போல வரலாறு எழுதும் முறை என்பது நமது நாட்டிலே இதற்கு முன்பு இருந்ததில்லை. நம்முடைய வரலாறு புராணங்களிலே கலந்து கிடக்கிறது. அந்தப் புராணங்களின் மிகைப்படுத்தல் பண்பு காரணமாக அவற்றை வரலாற்று ஆதாரங்களாக எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால், இந்திய வரலாற்றை எப்படித் தொகுப்பது என்பதைப் பற்றிய சிக்கல் வந்த நேரத்தில்தான் இந்தியாவில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நொபோரு கராஷிமாவின் நூலொன்றில் அட்டவணைப்படுத்தப்பட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் 59,800 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 44 ஆயிரம் கல்வெட்டுகள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவை. அதிலும் குறிப்பாக, 28 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் இருக்கின்றன. சம்ஸ்கிருதக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 7,800 மட்டும்தான். இந்தக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறியத் தொடங்கியதற்குப் பிறகுதான், தமிழ்நாட்டின் வரலாறு தெளிவடைய ஆரம்பித்தது. குப்தர்களின் காலத்தைப் ‘பொற்காலம்’ எனப் பாராட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு ‘இனிமேல், இந்திய வரலாற்றை எழுத வேண்டுமென்றால், தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுத வேண்டும்’ என்கிற நிர்ப்பந்தத்தைத் தொல்லியல் ஆய்வுகள் ஏற்படுத்தியுள்ளன.
கல்வெட்டியலைப் போலவே தொல்லியலின் பிற துறைகளான காசு இயலிலும் இப்போது பல்வேறு முக்கியக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப் பட்டுள்ளன. ‘‘சில ஆண்டுகளுக்கு முன்புவரை எழுத்துகள் பொறிக்கப்பட்ட சங்ககாலக் காசுகள் கிடைக்கவில்லை. மீன், புலி ஆகியவை பொறித்த சில சதுரமான காசுகள் கிடைத்தன. ஆனால், அவை சங்க காலத்தைச் சேர்ந்தவை என உறுதியாகக் கூற முடியவில்லை. இந்த நிலையில், 1987-ல் இரா.கிருஷ்ணமூர்த்தி முதன்முதலாகக் கண்டு பிடித்த ‘பாண்டியன் பெருவழிக்காசு’ தமிழக நாணயவியல் வரலாற்றில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது.
தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அகழாய்வுகளில் கண்டெடுக்கும் பொருட்களை வைத்து அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டைக் கட்டமைக்கிற, மதிப்பிடுகிற அணுகுமுறை ‘கலாச்சார வரலாற்றியல் கோட்பாடு’ எனப்படுவதாகும். இந்தியாவில் இந்தக் கோட்பாடுதான் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டுவருகிறது.
அகழாய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொருட்களின் காலத்தை ஏ.எம்.எஸ் காலக்கணிப்பு முறை என்னும் அறிவியல் முறையின் மூலமாகவே உறுதிப்படுத்துகின்றனர். பொருந்தல், கீழடி முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்கள் அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிக் காலக் கணிப்பு செய்யப்பட்டன. அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் தொல்லியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. சென்னை அருங்காட்சியகத்தில் தொல்பொருளியல் வேதியியலராக (ஆர்க்கியாலஜிகல் கெமிஸ்ட்) பணிபுரிந்த எஸ்.பரமசிவனும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கே.வி.கோவிந்தசாமியும் அறிவியல் முறையைப் பயன்படுத்தித்தான் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்த சோழர் கால ஓவியங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார்கள்.
Also Read: “கீழடி வரலாற்று சின்னங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திவிட்டது” : அமைச்சர் தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி !
ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பிராமி எழுத்துப் பொறிப்புகள்; இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள்; தங்கம், செம்பு ஆபரணங்கள்; அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் முதலானவை கிடைத்தன. அங்கு கிடைத்த செப்புப் பொருட்களை வேதி ஆய்வு (கெமிக்கல் அனாலிசிஸ்) செய்தபோது, நீண்ட காலமாகவே அங்கு செம்பை உருக்கிப் பொருட்களைச் செய்யும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்திருப்பது தெரிய வந்தது. இப்போது பயன்படுத்தப்படும் அதே தொழில் நுட்பத்தை ஆதிச்சநல்லூரில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கிபி 6-ம் நூற்றாண்டு வரை அங்கே தொடர்ச்சியாக உலைக்களங்கள் செயல்பட்டு வந்துள்ளன என்பதையும் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் வரலாற்றுத் தொன்மையை உறுதிப்படுத்தும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் தொல்லியல் ஆய்வுகள் வழங்கி வருகின்றன. அவற்றை வீண் வேலை எனக் கூறுவது அறிவியலையே மறுப்பதாகும். அதுமட்டுமின்றி, உலக அளவில் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், இரா.நாகசாமி, எ.சுப்பராயலு, இரா.கிருஷ்ணமூர்த்தி முதலானவர்களின் பங்களிப்புகளை அவமதிப்பதுமாகும்.
பழம் பெருமை பேசுவதும் வரலாற்றைப் போற்றுவதும் வேறு வேறு. தமிழக அரசியலில் தொல்லியலும்கூட அரசியல் கருவியாக்கப்படுகிறது. இதிலிருந்து தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் காப்பாற்றுவது இன்று தமிழகத்தின் நலம் நாடுவோரின் முக்கியமான கடமைகளுள் ஒன்றாகும்.
நன்றி - இந்து தமிழ் திசை
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!