Tamilnadu

“சட்டமன்றத்தில் கலைஞரின் திருவுருவப்படம் திறப்பு விழாவை காலம் என்றென்றும் மறக்காது”: தினத்தந்தி புகழாரம்

இன்று தமிழக வரலாற்றில் ஒரு பொன்னாள். சரித்திரத்தில் இடம்பெறும் ஒரு இனிய நன்னாள் என தினத்தந்தி தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.

தினத்தந்தி நாளேட்டில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை தொடங்கிவைக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 5 முறை முதல்-அமைச்சராகவும், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தும், பல அழியாத முத்திரைகளை பதித்த மறைந்த கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார். இந்த சிறப்புமிக்க நாளில் கலைஞரின் மகனான மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருப்பது, அவரது புகழுக்கு மணிமகுடம் சூட்டுவதுபோல் ஆகும்.

தமிழக சட்டமன்றத்தில் என்றென்றும் மறக்க முடியாத அவரது உரைகள், நிறைவேற்றிய திட்டங்கள், எப்படி அரசுகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறதோ, அதுபோல இனி சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம், அங்கு அமர்ந்திருக்கும், எதிர்காலத்தில் அமரப்போகும் உறுப்பினர்களுக்கு பாடமாக விளங்கும். தமிழக சட்டமன்றம், நூற்றாண்டு விழா காண்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு பெருமை. தமிழ்நாட்டில் இன்று நேற்றல்ல, கி.பி.917-ம் ஆண்டே மக்கள் ஆட்சி மலர்ந்து மணம் வீசியது என்பதற்கு, உத்திரமேரூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் சபை சுவற்றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளே சான்றாகும்.

அத்தகைய சீர்மிகு தமிழ்நாட்டில் முதன்முதலில் 1921-ம் ஆண்டு இப்போது மேலவை என்று கூறப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. இரு அவைகள் கொண்ட ஜனநாயக அமைப்புவேண்டும் என்ற நோக்கத்தில், 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் சட்டசபை உருவாக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மேலவை கலைக்கப்பட்டது. எப்படியும் மேலவையை கொண்டுவரவேண்டும் என்று கலைஞர் முயற்சி செய்தார். அது நிறைவேறவில்லை.

இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மேலவை கொண்டுவரப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அதை நூற்றாண்டு விழாகாணும் இந்த சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி, எப்படியும் மீண்டும் மேலவையை உருவாக்கவேண்டும். மேலவையில் மொத்தம் 11 தலைவர்கள் அருந்தொண்டாற்றியிருக்கிறார்கள். சட்டசபையில் இதுவரை 18 சபாநாயகர்கள் வரலாறு படைத்திருக்கிறார்கள். 19-வது சபாநாயகராக இப்போது மு.அப்பாவு பதவியேற்றுள்ளார். சட்டசபைக்கு மட்டுமல்ல, சபாநாயகர் இருக்கைக்கும் 100 வயது ஆகப்போகிறது.

தமிழக சட்டசபைக்கு ஜனாதிபதி வந்து முன்னாள் முதல்-அமைச்சர்கள் படத்தை திறந்துவைப்பது இது 2-வது முறையாகும். 1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெருந்தலைவர் காமராஜர் படத்தை அப்போதைய ஜனாதிபதி என்.சஞ்சீவரெட்டி திறந்துவைத்தார். இப்போது கலைஞர் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கிறார். தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் இந்த இருபெரும் தலைவர்களின் உருவப்படங்களை, நாட்டின் முதல் குடிமகன் திறந்துவைத்தது, இன்று திறந்துவைப்பது போற்றுதலுக்குரியது, பூரிப்புக்குரியது.

நூற்றாண்டு விழாகாணும் தமிழக சட்டசபைக்கு பல பெருமைகள் உண்டு. 1921-ல் இடஒதுக்கீடு ஆணையை நீதிக்கட்சி பிறப்பித்ததில் தொடங்கி, பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது, இந்த சட்டசபையின் தொடக்க காலங்கள்தான். 1967-ல் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான் “மெட்ராஸ் ஸ்டேட்” என்று இருந்த பெயரை தமிழ் மணம் கமழ, தமிழ்த்தாய் பூரிக்க, “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்பு நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது. ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சபாநாயகராக இருந்தபோதுதான் திருக்குறளை வாசித்து, அதன் பொருளையும் கூறி அவையை தொடங்கும் முறையை கொண்டுவந்தார்.

இதுவரை, முதல்-அமைச்சர்களாக இருந்த 21 தலைவர்களும், இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினும், இந்த நாட்டுக்கு தொண்டாற்றும் வகையில் பல சட்டங்கள், திட்டங்களை கொண்டுவந்தது இந்த பெருமைக்குரிய சட்டமன்றத்தில்தான்.

நீதிக்கட்சி, சுயேச்சை, காங்கிரஸ் கட்சி, தி.மு.க., அ.தி.மு.க. என்ற கட்சிகளை சேர்ந்த முதல்-அமைச்சர்கள் இந்த அவையை அலங்கரித்திருக்கிறார்கள். இன்று இந்த சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் அளப்பறிய தொண்டாற்றிய கலைஞர் கலைஞரின் திருவுருவப்படம் திறப்பு விழாவும், தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. இந்த இருபெரும் விழாக்களை காலம் என்றென்றும் மறக்காது.” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: ஆகஸ்ட் 2 வரலாற்றின் பொன்னாள்! வாழ்விலோர் திருநாள்! - பேரவைக்குள் கலைஞர் இருப்பது நமது நன்றியின் அடையாளம்!