Tamilnadu

ரூ.600 கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது... பண்ணை வீட்டில் மடக்கிப்பிடித்த குற்றப்பிரிவு போலிஸ்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்ட இவர்கள், நிதி நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுவாமிநாதன் சகோதரர்கள். இருவரும் தொழிலதிபர்கள். இவர்களில், கணேஷ் பா.ஜ.க வர்த்தகப் பிரிவில் பொறுப்பு வகித்துள்ளார்.

‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்ட இவர்களது பைனான்ஸ் நிறுவனத்தில், முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்து, வர்த்தகர்கள், பொதுமக்களிடம் வசூல் செய்துள்ளனர். இதற்காக ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்கு கமிஷனை அள்ளிக்கொடுத்து, கோடி கோடியாக முதலீட்டைப் பெற்றுள்ளனர்.

பலரும் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய நிலையில், கொரோனாவை காரணம் காட்ட கணேஷ்- சுவாமிநாதன் பிரதர்ஸ், பணத்தை செலுத்தியவர்களுக்கு முறையாக பணம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

மேலும், பணத்தை திருப்பிக் கேட்பவர்களிடம் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், பா.ஜ.க செல்வாகைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியர், தஞ்சாவூர் எஸ்.பி-யிடம் கணேஷ்- சுவாமிநாதன் ஆகியோர் சுமார் 15 கோடி வரை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், நிதி நிறுவனத்தை நடத்தி வந்த கணேஷின் மனைவி அகிலா (33), நிதி நிறுவன பொது மேலாளர் ஸ்ரீகாந்தன் உட்பட 5 பேரை தனிப்படை போலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஹெலிகப்டர் சகோதரர்கள், ஊழியர்கள், ஏஜென்ட்களை போலிஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த நிதி நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்த தங்களை, அந்நிறுவனத்தை நடத்தி வந்த கணேஷ், சுவாமிநாதன் ஆகியோர் ஏமாற்றிவிட்டதாகவும், அந்தப் பணத்தை மீட்டுத் தரும்படியும், கும்பகோணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், பரணிதரன், சிவக்குமார், பிரபு, வெங்கட்ராமன், லட்சுமி, பார்வதி, சுவாமிநாதன், ராமகிருஷ்ணன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், கும்பகோணம் பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து, தங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கணேஷ் மற்றும் சுவாமிநாதனை குற்றப்பிரிவு காவல்துறையினர் புதுக்கோட்டையில் உள்ள பண்ணை வீட்டில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: கும்பகோணத்தை அதிரவைத்த ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’... பா.ஜ.கவை சேர்ந்த மோசடி கும்பலின் அதிர்ச்சிகர பின்னணி!