Tamilnadu
"முதல்வர்கள் கொடியேற்றும் உரிமை பெற்றுத்தந்தவர்; இந்தியாவே வியக்கும் தலைவர்": சபாநாயகர் அப்பாவு புகழாரம்!
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.
முன்னதாக, வரவேற்றுப் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, "1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்றைய சென்னை மாகாண அவையில், இன்றைய ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் இடம்பெற்றிருந்தன.
அந்த வகையில் இந்தப் பேரவையே இந்தியாவின் தென் மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாக விளங்குகிறது. இப்படியான பெருமைவாய்ந்த சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவினை தொடக்கிவைக்கவும், இந்த பேரவையில் ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைக்கவும் வருகை தந்துள்ள குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர் அவர்கள். வங்காள மொழி அறிஞர் கூறுகையில், நாங்கள் இன்று ஆங்கிலம் படித்து உலகம் முழுவதும் சென்று பயனடைகிறோம் என்றால் அதற்குக் காரணம் கலைஞரின் உறுதியான மொழி கொள்கைதான் என்றும் இதுபோன்ற தலைவர் எங்கள் மாநிலத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படி இந்தியா முழுவதும் பல்வேறு தலைவர்களால் பாராட்டப்பட்ட தலைவர்தான் கலைஞர் அவர்கள். அதனால் தான், அவரது மறைவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத, தலைவரான கலைஞருக்கு இரு அவைகளிலும் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தான் சந்தித்த தேர்தலில் ஒரு முறைகூட தோல்வியைச் சந்திக்காமல் 13 முறை வென்று இந்த பேரவையின் உறுப்பினராகவும், ஐந்து முறை முதலமைச்சராகவும் இருந்து பேரவைக்கு பெருமை சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
சமூக நீதி காவலராக, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு, இஸ்லாமியருக்கான உள் ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான உரிமைகள் என அனைத்தையும் நிறைவேற்றிக் காட்டி இந்தியாவிற்கே முன்னோடி தலைவராக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்" எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!