Tamilnadu
அவர் இல்லாத சட்டமன்றமா? : ''இதோ... பேரவைக்கு வருகிறார் கலைஞர்!" - ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திறப்புவிழா இன்று (02.08.2021) நடக்கிறது. இதை முன்னிட்டு இன்றைய முரசொலி நாளேட்டில், கலைஞர் தொலைக்காட்சியின் செய்தித்துறைத் தலைவரும், எழுத்தாளருமாகிய ப.திருமாவேலன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் முத்தமிழறிஞர் கலைஞர் இன்று வருகை தர இருக்கிறார்! இதுவரை அவர் பேசினார். இனி அவர், அடுத்தவர் பேச்சைக் கவனிக்கப் போகிறார்! இதுவரை பேசியவர், இனி அனைவரையும் பேச வைக்கப்போகிறார்! புதிதாக யாரும் பேசத் தேவையில்லை! அவர் பேசியதையே வழிமொழிந்தால் போதும்!
"இந்த சபைக்குள் நாங்கள் வந்தது என்றைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினராகவே இருப்பதற்காக நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டால் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம்" - என்று முதல்முறை சட்டமன்றத்துக்குள் வந்தபோது பேரறிஞர் அண்ணா சொன்னார். அடுத்த பத்தே ஆண்டுகளில் கழகத்தின் கையில் ஆட்சி வந்தது. சொல்லி அடித்த கட்சி தி.மு.க. சொல்லி அடித்த தலைவர்கள்தான் பேரறிஞரும் முத்தமிழறிஞரும்! ‘நான் பாதியை எழுதிவிட்டேன், மீதியை தம்பி கருணாநிதி எழுதுவான்' என்ற தீர்க்கம் பேரறிஞரிடம் இருந்தது என்றால், அப்படிச் சொல்ல வைக்கும் திறம் முத்தமிழறிஞரிடம் இருந்தது.
அண்ணா, தனது திருவாரூர் தம்பியை சட்டமன்ற உறுப்பினராக அழைத்து வந்தார். இதோ, இன்று பேரவையில் பெரும்பாடமாக கலைஞர் உட்கார வைக்கப்பட இருக்கிறார்! எதிர்க்கட்சியின் உறுப்பினராக, தி.மு.க.வின் கொறடாவாக, எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவராக, மேலவை உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக - என பேரவைக்குள் எல்லா உருவும் தாங்கி வலம் வந்த கலைஞர், உருவற்ற பேருரு கொள்கிறார் இன்று. ‘நேற்று பற்றிய சிந்தனையால் வரும் அந்த பெருமூச்சை, இன்று போக்கி, நாளை பற்றிய நம்பிக்கையை யார் நமக்கு அளிக்கின்றாரோ அவர்தாம் தலைவர்' - என்று அன்றொரு நாள் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் கர்ஜித்தார் கலைஞர். இதோ நேற்றும் இருந்தார். இன்று இடம் பெறுகிறார். நாளையும் இருப்பார்!
ஈரோடு அவர் படித்த பள்ளி! காஞ்சி அவர்படித்த கல்லூரி! இந்தக் கோட்டைதான் அவரது நிரந்தரப் பல்கலைக் கழகம்! வேந்தர்களுக்கு ஓய்வு ஏது? சோழனும் சேரனும் பாண்டியனும் இன்றில்லை, ஆளவில்லை, அதற்காக அவர்கள் மன்னர்களாக இல்லாமல் போய்விடுவார்களா என்ன? செங்குட்டுவனும், இராசராசனும், நெடுஞ்செழியனும் இன்றும் மன்னரே. அரசரே. அந்த வரிசையின் தொடர்ச்சி அவர். அதனால் கோட்டை என்பது அவருக்கு எப்போதும் நிரந்தரம் என்பதே நிதர்சனம்! இலக்கியத்துக்கு இலக்கணம் சொன்னது தொல்காப்பியம். வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்னது வள்ளுவம். சமூகத்துக்கு இலக்கணம் சொன்னவர் பெரியார். அரசியலுக்கு இலக்கணம் சொன்னவர் அண்ணா. சட்ட சபை மரபுக்கு இலக்கணம் கலைஞர். அதனால் அவர் இருக்க வேண்டிய இடம் அதுவே. எல்லாச் சட்டமன்ற உறுப்பினர்க்கும் பால பாடம் என்பது கலைஞரின் சட்டமன்றப் பேருரைகள் தான்.
அதைப் படித்து, அதில் தோய்ந்து, அதை உணர்ந்து, அதையே பேசினால் போதும்! ‘வாளும் கேடயமும்' என்ற அவரது ஒன்றரை மணி நேர ஒரு உரை தான் அவரது ஆட்சியை அவரிடம் இருந்து பறித்தது. ‘இது நான்காம் வர்ணத்தவர் ஆட்சி' என்று ஒற்றை வரியில் இந்த ஆட்சியின் முகத்தையும் காட்டினார். ஒற்றை வரியிலும் ஒன்றரை மணி நேரத்திலுமாக எத்தகைய ரசாபாவத்தையும் அவரால் மட்டும்தான் காட்ட முடியும். நவரசம் என்ற கட்டுக்குள் அடங்காது கலைஞரின் பேச்சுக்கலை. அது அவர் ஆண்ட தர்பார். அந்த தர்பாருக்குள் வருகிறார் கலைஞர்! அவர் போற்றப்பட்ட இடம் மட்டுமல்ல; அவர் தாக்கப்பட்ட இடமும் அது! அவர் மகுடம் சூட்டப்பட்ட இடம் மட்டுமல்ல; 'முரசொலி'க்கு கூண்டு வைக்கப்பட்ட இடம் அது! அண்ணாவுக்கு அருகில் அமர்ந்த இடம் மட்டுமல்ல; அண்ணா இல்லாமல் அவர் அமர்ந்த இடமும் அது!
மூதறிஞர் இராஜாஜியை, பெருந்தலைவர் காமராசரை மட்டுமா அவர் பார்த்தார்? ‘என் ஆயுள் கூடியதால் நான் சந்தித்த கோமாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக ஆகிவிட்டது' என்று அவர் சொன்னார். அந்தக் கோமாளிகளைச் சமாளிக்கும் வித்தையையும் அவர் அறிந்தே இருந்தார். எப்போது வாள், எப்போது கேடயம், எப்போது பேனா, எப்போது பூ, எப்போது மவுனம் என்பதை பயன்படுத்தும் லாவகம் அவரது ரத்தத்தில் கலந்திருந்தது. அதனால் அது அரியவகை ரத்தம்! உடன்பிறப்புகளின் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டசபைச் சக்கரத்துக்கு அதுவே எண்ணெய்! பதிமூன்று முறை நின்றார். பதிமூன்று முறையும் வென்றார் என்பது வரலாறு. பதினான்காவது முறை நிற்கவில்லை. ஆனாலும் சபைக்குள் வந்தார் என்ற வரலாறு யாருக்கு உண்டு? கலைஞர் இல்லாமல் ஒரு அவை இருக்கலாமா? இதோ 'முதல்வர்' உருவாக்கிய ‘கலைஞர்' வருகிறார்! முதல்வரை உருவாக்கியவரல்லவா கலைஞர்!
நன்றி: முரசொலி நாளேடு.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!