Tamilnadu

டோக்கியோ ஒலிம்பிக் : 41 ஆண்டுகளாக தொடர் தோல்வி.. இழந்த பெருமைகளை மீட்குமா இந்திய ஹாக்கி அணி?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கும் பிரிட்டன் அணிக்குமிடையேயான காலிறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

ஒரு காலத்தில் ஹாக்கியில் இந்திய அணி வீழ்த்தவே முடியாத அணியாக இருந்தது. 1928, 1932, 1936, 1948, 1952, 1956 என ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம் வென்றிருந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1940, 1944 ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. அது நடைபெற்றிருந்தால் அதிலும் சேர்த்து வென்றிருப்பார்கள்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 29 பதக்கங்களை வென்றிருக்கிறது. அதில் ஹாக்கி அணியே அதிகபட்சமாக 11 பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறது. இதில் 8 தங்கப் பதக்கங்களும் அடக்கம். தயான்சந்த், பல்பீர் சிங் போன்ற அந்த கால ஹாக்கி வீரர்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்தனர்.

இதுவரை வேறு எந்த நாடும் ஹாக்கியில் இப்படி ஒரு சாதனையை செய்திருக்கவில்லை. ஆனால், இதெல்லாம் 1980 வரை மட்டுமே. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி கடைசியாக தங்கம் வென்றிருந்தது. அதன்பிறகு, முழுக்க முழுக்க வீழ்ச்சிதான். இந்த 41 ஆண்டுகளில் குறிப்பிடும்படி எந்த பெரிய வெற்றியையும் பெறவில்லை. உச்சபட்ச வீழ்ச்சியாக 2008 பீஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதியே பெறாமல் போனது இந்திய அணி.

2016 ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமே காலிறுதி வரை தகுதிப்பெற்றிருந்தது. இந்த முறை மீண்டும் காலிறுதிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. கடந்த முறைகளை விட டோக்கியோவில் இந்திய அணி மிகச்சிறப்பாகவே ஆடியிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 கோல்களை வாங்கி பெரிய தோல்வியை அடைந்திருந்தாலும், அதன்பிறகு மீண்டு வந்து மூன்று போட்டிகளில் வென்றது. நியுசிலாந்து, ஸ்பெயின், அர்ஜெண்டினா, ஜப்பான் நான்கு அணிகளை வீழ்த்தி தங்களது பிரிவில் இரண்டாமிடமும் பிடித்தது. இந்திய அணியின் சமீபத்திய ஆகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் இது.

மன்ப்ரீத் சிங் தலைமயில் துடிப்புமிக்க இளம் அணியாக இருக்கிறது இந்திய அணி. டிஃபன்ஸில் வலுவாக இருக்கிறது. அட்டாக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பெனால்டி வாய்ப்புகளில் அதிக கோல்களை அடிக்கிறார்கள். ஃபீல்ட் கோல்கள் ரொம்பவே குறைவாக இருக்கிறது. அதையும் சரி செய்தாக வேண்டும்.

இந்தியாவை விட தரவரிசையில் பின்னால் இருக்கும் அணி பிரிட்டன். மேலும், இந்திய அணி மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டியை இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது. அப்படி வெல்லும்பட்சத்தில் கடந்த 41 ஆண்டுகளில் இந்திய அணி செய்த மிகப்பெரிய சாதனையாக அது இருக்கும். உலகின் தலைசிறந்த அணியாக இருந்து வீழ்ச்சியை சந்தித்த இந்திய அணி இழந்த பெருமைகளை மீட்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

-உ.ஸ்ரீ

Also Read: ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீரா பாய் வீடு: வறுமையை எளிமை என பிதற்றாதீர்கள்- இணையத்தில் வைரல் ஆகும் கருத்து!