Tamilnadu

ஞாபகம் இருக்கா: ரயிலில் துளையிட்ட கொள்ளை சம்பவம்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலிஸிடம் சிக்கிய கொள்ளையன்!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 2019 செப்டம்பர் 14ம் தேதி நவஜீவன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலின் சரக்குப் பெட்டியில், 60 பண்டல்களில் பல லட்சம் மதிப்புள்ள புடவைகள் பார்சல் வைக்கப்பட்டிருந்தன.

பின்னர் இந்த ரயில் மறுநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து சரக்கு பெட்டியில் உள்ள பார்சல்களை இறக்குவதற்காக, கதவைத் திறக்க முயன்ற போது கதவு திறக்கவில்லை. பிறகு தாழிடப்பட்ட பகுதியை வெட்டி எடுத்து கதவைத் திறந்தனர்.

பிறகு பெட்டியின் உள்ளே சென்று பார்த்தபோது, பார்சல் பண்டல்கள் கலைந்த நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் ரயில் பெட்டியின் மேல் பகுதியில் ஆள் நுழையும் அளவுக்குத் துளையிடப்பட்டிருந்தது. இந்த துளை அடுத்த பெட்டியின் கழிவறை பகுதிக்குச் சென்று முடிவடைவதை போலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்த துளைவழியைப் பயன்படுத்தித் தொன் கொள்ளையர்கள் பார்சல் பண்டல்களை திருடிச் சென்றுள்ளனர் என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் 12 பண்டல்களில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம மதிப்புள்ள புடவைகளைக் கொள்ளை அடித்துச் சென்றதை ரயில்வே பாதுகாப்புப் படையினர் உறுதி செய்தனர்.

இந்த கொள்ளை தொடர்பாகச் சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் கொள்ளையர்கள் குறித்தான எந்த தடையமும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை.

இருந்தபோதும் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதே கொள்ளை போல் வேறு எங்காவது நடந்துள்ளதா என போலிஸார் தேடியபோது, நாக்பூர் - வார்தா ரயில் நிலைய சந்திப்புக்கு இடையே இதேபோன்று கொள்ளை சம்பவட் நடந்தது போலிஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளைபோன ரயில் பெட்டியை ஒட்டி பயணம் செய்த பயணிகளின் செல்போன் எண்கள், பழைய வழக்கில் தொடர்புடைய நபர்களின் செல்போன் எண்களின் டவர் லொக்கேஷனை கண்டறியும் பணியில் போலிஸார் ஈடுபட்டனர். அப்போது பழைய கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவர், எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தது உறுதியானது.

பின்னர் அந்த நபர் குறித்து போலிஸார் ரகசியமாக விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் இவருக்குத் தொடர்பு இருப்பதை போலிஸார் உறுதி செய்தனர். இதையடுத்து நாக்பூர் மொமின்புரா என்ற பகுதியை சேர்ந்த கொள்ளையன் முகம்மது ஜெசிம் என்பவரைக் கைது செய்தனர்.

இதையடுத்து முகம்மது ஜெசிம் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சென்னைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டார். கழிவறை மேல் பகுதியில் துளையிட்டு, அதன் வழியாக உள்ளே சென்று, அருகே உள்ள சரக்கு பெட்டியின் மேல் பகுதியை வெட்டி எடுத்து, பார்சல் பண்டல்களைக் கொள்ளை அடித்துச் சென்றதை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை போலிசார் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஓடும் மின்சார ரயிலில் கடத்தப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. ரயிலில் நடந்த துணிகர கடத்தல் சம்பவம்!