Tamilnadu
“மோடியின் வீட்டு வாசலில்தான் கொடி பிடிக்கவேண்டும்.. OPS - EPS நடத்தும் நயவஞ்சக நாடகங்கள்”: முரசொலி சாடல்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 31, 2021) தலையங்கம் வருமாறு:-
பத்தாண்டுகளாக ஆட்சியைக் கையில் வைத்திருந்து 80 நாட்களுக்கு முன்புவரை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க என்ற கட்சி இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு அசிங்க ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லையாம்!
ஆட்சிக்கு வந்து இன்னும் 100 நாட்களே ஆகவில்லை. அதற்குள் நம்பர் 1 ஒ.பன்னீர்செல்வமும், நம்பர் 2 ஒ.பழனிசாமியும் சேர்ந்து பதாகைகளைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. ‘அறுக்க மாட்டாதவனுக்கு இடுப்பில் 52 கத்தி எதற்கு?' என்பார்கள் கிராமத்தில். அதைப்போல, பத்தாண்டு காலத்தில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத இரண்டு பேர், 100 நாட்கள்கூட ஆகாத ஆட்சியைப் பார்த்து கேள்வி கேட்பது கேவலமாக இருக்கிறது!
2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வென்ற கட்சி அ.தி.மு.க.! இந்த இரண்டு தேர்தல்களிலும் கொடுத்த வாக்குறுதிகளை பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றினார்களா என்றால் இல்லை! 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது எதுவும் செய்யப்படவில்லை!
* இலவச செல்போன் தரப்படவில்லை.
* ஆவின் பால் பாக்கெட் 25 ரூபாய்க்கு தரப்படும் என்றார்கள். தரவில்லை.
* ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாகத் தரப்படும் என்றார்கள். தரவில்லை.
* குறைந்த விலையில் அவசியமான மளிகைப் பொருள்கள் தரப்படும் என்றார்கள். தரவில்லை.
* வீடில்லா ஏழை மக்களுக்கு 3 சென்ட் இடம் தரப்படும் என்றார்கள். தரவில்லை.
* அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை தரப்படும் என்றார்கள். தரவில்லை.
* கல்விக் கடன்கள் அனைத்தும் அடைக்கப்படும் என்றார்கள். அடைபடவில்லை.
* கோ ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும் என்றார்கள். தரப்படவில்லை.
* பண்ணை மகளிர் குழுக்கள் அமைக்கப்படும் என்றார்கள். அமைக்கப்படவில்லை.
* அனைத்து பழங்களுக்குமான சிறப்பு வணிக வளாகங்களை உருவாக்குவோம் என்றார்கள். உருவாக்கவில்லை.
* அனைத்து பொது இடங்களிலும் வைஃபை வசதி கொடுக்கப்படும் என்றார்கள். கொடுக்கவில்லை.
* டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் அமைக்கப்படும் என்றார்கள். அமைக்கப்படவில்லை.
* பட்டு ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்றார்கள். உருவாக்கவில்லை.
* சென்னையில் மோனோ ரயில் விடுவோம் என்றார்கள். மோனோ ரயிலையே காணோம்.
* கோவையில் மோனோ ரயில் ஓடும் என்றார்கள். காணோம்.
* திருச்சியில் மோனோ ரயிலை விடுவோம் என்றார்கள். காணோம். - இதுதான் இரண்டு ஒ.க்கள் ஆண்ட லட்சணம்! அதற்கும் முன்னால் 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையாவது நிறைவேற்றப்பட்டதா என்றால் அதுவும் இல்லை!
* இரண்டாவது விவசாயப் புரட்சித் திட்டம் கொண்டுவருவோம் என்றார்கள். எந்தப் புரட்சியும் நடக்கவில்லை!
* விவசாயிகளின் வருமானத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்துவோம் என்று சொன்னார்கள். இருந்த வருமானமும் போனது தான் மிச்சம்!
* எல்லா விவசாயக் கருவிகளையும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுப்போம் என்றார்கள். தரவே இல்லை!
* கரும்புவிலையைப் போல மற்ற விவசாயப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என்றார்களே தவிர நிர்ணயிக்கவில்லை!
* கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய பணத்துக்குப் பாக்கி வைக்கமாட்டோம் என்று சொன்னீர்களே? அதன் படி நடந்தீர்களா...? இல்லை!
* சொட்டு நீர்ப்பாசனத்தை அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகச் செய்து கொடுப்போம் என்றீர்களே?... செய்து கொடுத்துவிட்டீர்களா? - இப்படி எதுவுமே நடக்கவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துகிறீர்கள்?
பன்னீர்செல்வமும், பழனிசாமியும் காவிரியைப் பற்றியும் மேகதாதுவைப் பற்றியும் முழக்கமிடுகிறார்கள். இந்த முழக்கத்தை டெல்லியில் அல்லவா போய் போட வேண்டும்? 2007 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் காலத்தில் போடப்பட்ட வழக்கையே விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காத அரசு அ.தி.மு.க அரசு. 2011 இல் இருந்து வாய்மூடிக் கிடந்ததால்தான் இறுதி விசாரணையே 2017 ஆம் ஆண்டுதான் நடந்தது. உச்சநீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது தமிழக அரசு சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை. தமிழக அரசின் மனுவில் என்ன சொல்லப்பட்டு இருந்ததோ, அதைக் கூட நீதிமன்றத்தில் சொல்லி வாதங்களை வைக்கவில்லை.
தமிழக அரசின் வழக்கறிஞர் பேசுவதும், மனுவில் உள்ளதும் வேறு வேறாக இருக்கிறதே என்று நீதிபதிகளே சொன்னார்கள். இப்படி அலட்சியமாக வழக்கை நடத்திய அரசுதான் அ.தி.மு.க அரசு. வழக்கின் இறுதித் தீர்ப்பு 2018 ஆம் ஆண்டு வந்தது. அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதனை ஒன்றிய பா.ஜ.க அரசு செய்யவில்லை. பா.ஜ.க.வை செய்ய வைக்க பழனிசாமியால் முடியவும் இல்லை.
ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பைத் தொடங்கியது. அதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையோடு இதனைச் சேர்த்துவிட்டார்கள். அதையும் எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. இதைவிட பழனிசாமியின் பச்சைத் துரோகம் என்ன இருக்க முடியும்? மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான தண்ணீர் வரத்து குறைந்துவிடும். ஆனால் கட்டுவதில் உறுதியாக இருந்தது கர்நாடகம். கர்நாடக அரசியல் கட்சிகளை அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்திக்கிறது கர்நாடக அரசு. ஆனால் தமிழகக் கட்சிகளை அழைத்துச் சென்று பிரதமரை எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லை.
முதுகெலும்பு இல்லாமல் பா.ஜ.க. அரசுக்குத் தலையாட்டிக் கொண்டு இருந்தார் பழனிசாமி. இப்படிப்பட்ட துரோக சாமிதான் இன்று பதாகை பிடித்துக் கொண்டு நிற்கிறார். ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேட்கிறார் பழனிசாமி. ‘நீட்’ தேர்வை நடத்துவது தமிழ்நாடு அரசல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசு. அவர்கள்தான் ரத்து செய்ய வேண்டும். அதற்கான அடிப்படை வேலைகளை கழக அரசு செய்து வருகிறது. உடனடியாக ரத்து செய்ய வேண்டுமானால் மோடியின் வீட்டுவாசலுக்குத்தான் பழனிசாமி போக வேண்டும். தன் வீட்டு வாசலில் கொடி பிடிக்கக் கூடாது.
தன் கையில் பதவி இருந்தபோதெல்லாம் டெண்டர்களைத் திறப்பது, மூடுவதில் மட்டுமே கவனமாக இருந்த ஒ - து.ஒ. கூட்டம், இப்போது அரசியல் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தத் தொடங்கி இருப்பதைப் போன்ற நயவஞ்சக நாடகங்கள் வேறு இருக்க முடியாது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!