Tamilnadu
முட்டையில் முதலீடு; 4.5 லட்சத்தை சுருட்ட எத்தனித்த பலே நிறுவனம்; சென்னையில் கையும் களவுமாக பிடித்த போலிஸ்
Rafoll retails pvt ltd egg mart என்ற நிறுவனம் ஒரு முட்டையின் விலை 2.24 பைசா மட்டுமே எனவும் 700 ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 6 முட்டைகள், 1400 முதலீடு செய்தால் வாரம் 12 முட்டைகள், 2800 முதலீடு செய்தால் 24 முட்டைகள் டோர் டெலிவரி செய்யப்படும் என்ற விளம்பரம் கடந்த 18ஆம் தேதி நாளிதழில் வெளியானது.
இந்த விளம்பரத்தை கண்ட பொதுமக்கள் பலர் குறைந்த விலையில் முட்டை கிடைப்பதாக நினைத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணத்தை முதலீடு செய்தனர். இதனை கண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி விளம்பரம் போல் இருப்பதாக நினைத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.
கடந்த 20 ஆம் தேதி நிறுவனரான அரக்கோணத்தை சேர்ந்த சிவம் நரேந்திரன் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். இவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் முறையான உரிமம் பெறாமல் திருமுல்லைவாயிலில் நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது.
மேலும் விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் அனுப்பிய பணத்திற்கு அவர்கள் எந்த விதமான ரசீதையும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த விளம்பரத்தை பார்த்து தமிழகம் முழுவதும் 310 நபர்கள் திட்டத்திற்கேற்ப இந்த நிறுவன வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியது கண்டறியப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அனுப்பிய 4.5லட்ச ரூபாய் பணத்தை சம்மந்தப்பட்ட வங்கி கணக்கிற்கே போலீசார் திரும்ப அனுப்பினர்.
ஏற்கெனவே நரேந்திரன் இந்த நிறுவனத்தின் மூலமாக பலசரக்கு வியாபாரம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து உரிமம் பெறாத கம்பெனியை மூடி, இந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இனி இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் பணத்தை அனுப்ப முடியாத படி செய்தனர்.
மேலும் குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக கூறி வரக்கூடிய கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனவும் தீர விசாரித்து பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டனர்.
Also Read
-
நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
-
“அதானி ஊழலை திசைத் திருப்ப பார்க்கிறார்” - மருத்துவர் ராமதாஸ் அறிக்கைக்கு வைகோ கண்டனம்!
-
ரூ.27.34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!