Tamilnadu

ரூ.4 கோடி சொத்துகள் அபகரிப்பு; வீட்டில் அடைத்து சரமாரியாக தாக்கிய கொடூர மகன்கள்; தந்தை பரபரப்பு புகார்!

திருவள்ளூர் அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி. பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு கோபால கிருஷ்ணன், மோகன் மற்றும் குணசேகரன் என 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் செய்து வைத்ததோடு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வீடு கட்டி கொடுத்து வாழ வைத்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் சிறப்பாக பார்த்துக் கொள்வதாக கூறி முதியவர் மணியின் ஓய்வூதியத்தை வாங்கி 3 பேரும் செலவழித்ததோடு மட்டுமல்லாமல் அவரது சேமிப்பு பணத்தையும் பிடுங்கி கொண்டதாக தெரிகிறது. இப்படி இருக்கையில் முதியவருக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி கையெழுத்து பெற்று அபகரித்துள்ளனர்.

மேலும் வீட்டிலேயே கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியும் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்து தப்பி வெளியே வந்த மணி கோயில், குளம் என தங்கி தனது ஜீவனத்தை நடத்தி வந்ததாகவும், பெற்ற மகன்களே இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் தான் சுயமாக சம்பாதித்து சேர்த்த சொத்தை தந்தை என்றும் பார்க்காமல் கொலை செய்து விடுவதாக மிரட்டி அபகரித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் இடம் புகார் மனுவை அளித்தார்.

மனுவைப் பெற்ற ஆட்சியர் மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக முதியவர் மணி தெரிவித்தார். பெற்ற மகன்களுக்காக தான் சம்பாதித்த சொத்தை நானே கொடுத்திருப்பேன். ஆனால் என்னை தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டி சொத்த அபகரித்த தன் மகன்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற நிகழ்வுகள் இனி வேறெங்கும் நடக்காதவாறு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதியவர் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

Also Read: நடைபயிற்சி சென்ற நீதிபதி கொலை.. பா.ஜ.கவுக்கு தொடர்பா? - சிசிடிவி காட்சியால் சிக்கிய குற்றவாளிகள்!