Tamilnadu
போதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்!
உதகையில் உள்ள காந்தல் பகவதியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மோனிஷா (26), ராபின்(29) ஆகிய இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளன. இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இவர்கள் கொரோனா காலங்களில் வாழ்வாதாரம் இன்றி இருந்ததாகவும், வீடு மழையினால் சேதமடைந்ததாகவும் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் போனதால் 3 வயதுடைய முதல் பெண் குழந்தையை மோனிஷாவின் அக்கா பிரவீனாவிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். மேலும் ராபினின் நண்பர் உதவியுடன் திருப்பூரை சேர்ந்த நிசார்பாய் என்பவருக்கு இரண்டாவது குழந்தையான ஒன்றரை வயது பெண் குழந்தையையும், சேலம் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி, பூபதி தம்பதியினருக்கு 3 மாதமான ஆண் குழந்தையையும் சட்டத்திற்கு புறம்பாக தத்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் குடிபோதையில் ராபின் மற்றும் மோனிஷா இருவரும் பிரவீனா வீட்டிற்கு சென்று குழந்தையை தரும்படியும், அந்த குழந்தையை விற்க வேண்டும் என்றும் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அச்சமடைந்த பிரவீனா நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்தல் பாரதியார் அறக்கட்டளை கிளை அலுவலகத்தில் உள்ள வழக்கறிஞர் கங்காதரனிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் உடனடியாக சமூகநல துறை அலுவலர் தேவகுமாரிக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு மற்றும் சமூக நல அலுவலர் சார்பில் சமூக நல பணியாளர் தவமணி மற்றும் குழுவினர் காந்தல் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் உண்மைத் தன்மையை உறுதி செய்த பின்னர், உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையிலான போலீசார் இரவோடு இரவாக திருப்பூர் மற்றும் சேலத்திற்கு சென்று குழந்தைகளை மீட்டு உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் குழந்தைகள் பணத்திற்காக விற்பனை செய்தனரா? அல்லது பராமரிக்க முடியாமல் தத்துகொடுத்தனரா? என விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆண் குழந்தையை கோவை மாவட்டத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கும் , பெண் குழந்தையை சேலம் மாவட்டத்தை சேர்ந்த முகமது பரூக் தம்பதியினருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கும் , உதகையை சேர்ந்த இடைத்தரகர்கள் பரூக் மற்றும் கமல் ஆகியோர் மூலம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் மாலை ஆறு மணி வரை நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது உறுதியானதால் குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளை விலைக்கு வாங்கிய முகமது மற்றும் உமா, இடைத்தரகர்கள் பரூக், கமல் என ஆறு பேரை உதகை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர் .
கணவன் மனைவி ஆகியோர் குடிப்பழக்கத்தால் வேலைக்கு செல்வதை தவிர்த்து , பெற்று குழந்தைகளை விற்பனை செய்து அதில் குடித்தும் மகிழ தரகர்கள் மூலம் குழந்தைகள் விற்ற சம்பவம் உதகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!