Tamilnadu

“பணமதிப்பிழப்பு காலத்தில் கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்தி பணம் மாற்றம்”: விரைவில் விசாரணை- அமைச்சர் உறுதி!

பணமதிப்பிழப்பு காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடைபெறும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு முழுவதும் 7,000 நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் கடைகளை சொந்த கட்டிடத்தில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 3500 -க்கும் மேற்பட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணி நியமனம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும்.

கூட்டுறவு சங்கங்களை பொதுமக்கள் தேடி வரும் நிலையை உருவாக்க வேண்டும். கந்துவட்டி கொடுமையால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அனைத்து கடன்களும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வுகள் வரும் 31-ஆம் தேதிக்குள் நிறைவுபெறும், அதன்பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயிர்க்கடன் வழங்கியது மட்டுமல்லாமல் பணமதிப்பிழப்பு காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் அதிகளவு பண மாற்றம் நடந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கத் தேர்தல் விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டிருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றும் இது குறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Also Read: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு.. 400 பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!