Tamilnadu

“கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்” : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

பொறியியல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “தமிழ்நாடு முழுவதும் கலை - அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 24 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழங்களில் ஒற்றை சாளர முறையில் நேற்றுவரை 41,363 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேபோல் அரசுக் கலை கல்லூரிகளில் 1,26,748 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் கல்லூரிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும். எல்லா பல்கலைக்கழகங்களும் ஒரேமாதிரியான நடைமுறையைப் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டைத் தவிர மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். குறிப்பாக, கல்லூரிகளில் 2-வது 3-வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும். கொரோனா தொற்று குறைந்தவுடன் கல்லூரிகள் திறப்பது குறித்து, முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!