Tamilnadu

நாட்டிலேயே முதல்முறை..தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்களுக்கு தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்திடும் திட்டத்தினை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கொரோனா தொற்றை தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழித்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். குறிப்பாக இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி தேவையான தடுப்பூசிகளைப் பெற்று மக்களுக்கு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு தடுப்பூசி வழங்குவதில் அரசு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையிலான தடுப்பூசி ஒதுக்கீட்டை 75:25 என்ற விகிதத்திற்கு மாறாக 90:10 சதவிகிதமாக மாற்றி அமைக்க வேண்டும் என ஒன்றிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி உதவியில் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதியில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக காவிரி மருத்துவமனையில் 6 தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் 36 ஆயிரம் பேருக்கு இலவச தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் தொடரப்படஉள்ளது. எந்த நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் எந்த மருத்துவமனையுடன் இணைந்துள்ளது, இதன் மூலம் எத்தனை பேருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள் ஒவ்வொரு மருத்துவமனையின் வளாகத்திலும் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ், தடுப்பூசி போடும் தற்போதைய நடைமுறையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.