Tamilnadu
"எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் அடிப்படை வசதிகள்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா மற்றும் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “டெல்டா மாவட்டங்களிலிருந்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்டத்தில் கலந்து கொண்டார்கள். 8 மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள்,குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.சட்ட மன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிக்கு தேவையானதை கோரிக்கையாக வைத்துள்ளார்கள். அனைத்தை கோரிக்கைகளை விரைந்து முடிக்கவும் அதில் உள்ள சிரமங்களை துறையின் அதிகாரிகளுடன் கலந்து பேசி பணிகளை விரைவாக முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி, பாதுகாப்பட்ட குடிநீர் வசதி, ஏற்கனவே கட்டப்பட்டு பழுதடைந்துள்ள கட்டிடங்களை சரிசெய்தல், பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைத்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் அதை சரியாக பராமரிக்காத காரணத்தால் கழிவுநீர் குடிநீரோடு கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதையெல்லாம் கண்டறிந்து விரைவாக சரி செய்யும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் உள்ள காவிரி ஆற்றில் 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தை கடந்த ஆட்சியில் அதிகம் சேதப்படுத்தி விட்டார்கள். அந்த பாலத்தின் பலம் குன்றிவிட்டது. எனவே காவிரியின் குறுக்கே புதிய பாலம் கட்ட திட்டம் உள்ளது. திருச்சியில் சுற்றுச்சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னேறிய மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற பகுதிகளுக்கு நகர்புறங்களில் உள்ள வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் சாலைகள் அமைக்க விடப்பட்ட டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அது எதற்காக ரத்து செய்யப்பட்டது என்பதை பார்த்துவிட்டு மற்ற மாநகராட்சிகளில் டெண்டர் விடப்பட்டதிலும் சாலைகள் அமைப்பதிலும் ஏதெனும் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியிலேயே 80 சதவீதம் செலவு செய்து விட்டார்கள். மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். சில ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விருப்பம் இல்லை எனச் சிலர் கூறுகிறார்கள். அவர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். விருப்பப்பட்டால் மட்டுமே ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைப்போம்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தவறு செய்திருப்பதாக தெரிந்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டது. தவறு செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!