Tamilnadu
“ஆமா.. வருசத்துக்கு ஆறு கோடி சொத்து வாங்குறோம்” - எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும் வீடியோவால் அதிர்ச்சி!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிந்துள்ள நிலையில், அவரே வருடத்திற்கு 6 கோடி மதிப்பில் சொத்து வாங்குவதாக ஒப்புதல் அளித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும், அ.தி.மு.க ஆட்சியில் வாகனங்களுக்கான ஜி.பி.எஸ் கருவி கொள்முதலில் தகுதியுள்ள நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவரது உதவியாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலிஸார் கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்தினர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், சகோதரர் சேகர், மனைவி விஜயலட்சுமி உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும், பல கோடி மதிப்பிலான ஆவணங்களையும் போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக இருந்தபோது வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, “வருசத்துக்கு அஞ்சரை கோடி ஆறு கோடி சொத்து வாங்கிட்டுத்தான் இருக்குறோம்.. இல்லைன்னு சொல்லல” என பொதுவெளியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசிய காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!