Tamilnadu

தங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை சேர்த்து விற்று மோசடி: பிரபல தி.நகர் நகைக்கடை மீது அரசு மருத்துவர் புகார்

சென்னை ஐயப்பன் தாங்கல் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(35). மருத்துவரான இவர் சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திரிவேணி கடந்த 22 ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது கணவர் சிவனேசனுடன் தி.நகர் துரைசாமி சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை கடைக்கு சென்று 3 சவரன் தங்க நகை வாங்கினோம்.

இதே போல் சரவணா ஸ்டோர் என்ற தரத்தை நம்பி பல தங்க நகைகளை இந்த கடையில் வாங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சரவணா ஸ்டோரில் வாங்கிய 3 சவரன் தங்க செயின் ஒன்று அறுந்து விழுந்த போது, செயினுக்குள் அதிக எடைக்கூடிய வெள்ளி நகையை சேர்த்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், குறிப்பாக தங்க நகையின் எடையை கூட்டுவதற்காக வெள்ளியை சேர்த்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

Also Read: உஷார்: ஆபாச படம் பார்ப்பவர்களா நீங்கள்? போலிஸ் போர்வையில் மோசடி கும்பல் செய்த அதிர்ச்சிகர வேலை!

இதனையடுத்து இந்த மோசடி குறித்து சரவணா கடை மேனேஜரிடம் முறையிட்ட போது தவறு நடந்திருப்பதாக கூறி மன்னிப்பு கேட்டு வேறொரு செயினை மாற்றி கொடுத்தார். இதனை தொடர்ந்து மீண்டும் சரவணா ஸ்டோரில் வாங்கப்பட்ட மற்றொரு நகைக்குள் காப்பரை மறைத்து வைத்து மோசடி செய்திருப்பது தெரியவந்ததையடுத்து உடனடியாக மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததாக திரிவேணி குறிப்பிட்டுள்ளார்.

எனவே சரவணா ஸ்டோர் என்ற தரத்தை நம்பி பொதுமக்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் நகையை வாங்கி செல்வதாகவும், அந்த நகையில் இதே போன்ற மோசடியில் ஈடுபடும் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து திரிவேணி அளித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி போலி தங்க நகைகளை வழங்கியதாக சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “இது என் ஏரியா.. என்னை கேட்க நீ யார்” : நடுரோட்டில் போலிஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் : நடந்தது என்ன ?