Tamilnadu

“இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இஸ்ரேல் விவகாரம்; மோடி-ஷா விளக்கம் அளிக்கத் தயாரா?”: முரசொலி கேள்வி!

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 23,2021) தலையங்கம் வருமாறு: -

இந்தியாவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது இஸ்ரேல்! பொதுவாகவே ஏதாவது கொதிநிலையிலேயே மற்ற நாடுகளை வைத்திருக்கும் நாடுதான் இஸ்ரேல். இதோ இப்போது இந்தியா!

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென் பொருள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரின் செல்போன் தகவல் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியை ‘தி கார்டியன்' இதழ் வெளியிட்டுள்ளது. ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழும் வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து பெகாசஸ் மால்வேர் சாஃப்ட்வேர் தொடர்ந்து சர்ச்சையில் இடம்பெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் போராட்டக்குழுவுக்கு தேவையான தகவல்களை இந்த உளவு மென்பொருள் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த இணைய தள செய்தி நிறுவனமான ‘தி வயர்' இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 2 மத்திய அமைச்சர்கள் உட்பட 300 பேரின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், மனித உரிமை போராளிகள் ஆகியோரது ஸ்மார்ட்போன் எண்களும் அடங்கும்.

‘தி இந்து', ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆகியவற்றில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர்களின் ஸ்மார்ட் போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் ‘வயர்' தனது புலனாய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. ஏ. எஃப்.பி, வால் ஸ்ட்ரீட், சி.என்.என்., நியூயார்க் டைம்ஸ், அல் ஜஸீரா, பிரான்ஸ் 24, ரேடியோ பிரீயூரோப், மீடியாபார்ட், எல் பாரிஸ், அசோசியேடட் பிரஸ், லே மோன்ட், புளூம்பெர்க், எகனா 7, மிஸ்ட், ராய்ட்டர்ஸ், வாய்ஸ் ஆப் அமெரிக்கா, கார்டியன் ஆகியவற்றின் பத்திரிகையாளர்களின் எண்களும் இதில் உள்ளது.

இந்தியாவில் முன்னாள் காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிசேக் பானர்ஜி ஆகியோர் உளவுபார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வால், ஒன்றிய அரசால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. மழுப்புகிறார்கள். நாங்கள் தகவல் பெறவில்லை என்று சொல்லவில்லை. நாங்கள் சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்கிறார்கள்.

“மத்திய அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஊடுருவி உளவு பார்ப்பதாக வெளியான தகவல் இந்திய ஜனநாயகத்துக்கு தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது” என்று ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சொல்லி இருக்கிறார். “இந்தியாவில் அனுமதி இல்லாத நபர்கள் மூலம் எந்தவிதமான சட்டவிரோதக் கண்காணிப்பும் நடக்கவில்லை” என்கிறார் அமைச்சர் அஸ்வினி.

‘இந்தியா வளரக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்தமாதிரி தகவல்களை பரப்புகிறார்கள்' என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. “அவர் என்ன படித்துக் கொண்டு இருக்கிறார்? உங்கள் வாட்ஸ் அப் அனைத்தையும் படிக்கிறார்” என்று விமர்சித்துள்ளார் ராகுல். “அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் மென் பொருள் விற்கப்பட்டுள்ளது. சீன அரசோ, பாகிஸ்தான் அரசோ இந்தியக் குடிமக்களை உளவுபார்க்க முடியாது. இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும்'' என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

“தொலைபேசி ஒட்டுக் கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும். இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி விளக்கமளித்தால் நல்லது. இல்லாவிட்டால் அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் போல இது தலைவலியாக மாறும்” என்று சுப்பிரமணிய சுவாமியே சொல்கிறார் என்றால் அதிக தீவிரமாக யோசிக்கத் தேவையில்லை.

மைக்ரோசாப்ட் அறிக்கையின்படி, அரசியல்வாதிகள், அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தூதரக தொழிலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட உலகெங்கிலும் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களை உளவு பார்க்க அரசாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு இஸ்ரேலிய ஹேக்கிங் - வாடகை நிறுவனம் உதவியுள்ளது. இந்த நிறுவனம், பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்படாத வளர்ந்து வரும் தொழில்துறையின் ஒரு பகுதியாகும். இந்த வசதியை அரசு மட்டுமே பெற முடியும் என்கிறார்கள். கேண்டிருவின் உளவு கருவிகளின் முழு திறன்கள் தெளிவாக இல்லை.

ஆனால் அவை பாதிக்கப்பட்டவர்களின் தகவல் தொடர்புகளை இடைமறிக்கவும், அவற்றின் தரவைத் திருடவும், அவற்றின் இருப்பிடத்தைக் கண்காணிக்கவும், ஒலி வாங்கிகள் மற்றும் கேமராக்கள் மூலம் உளவு பார்க்கவும் அனுமதிக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். சட்டபூர்வமான சட்ட அமலாக்கத்திற்கும் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கும் மட்டுமே உதவுகின்றன என்று நிறுவனங்கள் கூறுகின்றன. கேண்டிருவின் செயல்பாடுகள் பற்றி மிகக் குறைவாகவே தெரியவருகிறது. சிட்டிசன் லேப் அறிக்கையின்படி, நிறுவனம் தனது ஆறு ஆண்டுகளில் அதன் அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் பெயரை நான்கு முறை மாற்றி உள்ளது. இந்த நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக சைட்டோ டெக் லிமிடெட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஒன்றிய அரசு தனது நிலையை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக வைத்திருக்க வேண்டும். ‘நாங்கள் எந்தத் தகவலையும் பெறவில்லை' என்று சொல்லாமல், ‘சட்டவிரோதச் செயல்கள் நடக்கவாய்ப்பில்லை' என்பது பதிலாக இல்லாமல் சமாளிப்பாக இருக்கிறது.

Also Read: “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்க” - பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்!