Tamilnadu
"சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை" : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!
சேலம் மாநகரப்பகுதியில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாடு முழுவதும் 539 கோயில்கள் வகைப்படுத்தப்பட்டுப் புனரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்து அறநிலையத்துறை சார்பில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த 50 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களின் வாடகை வருவதில் நிலுவை உள்ளது. இதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அதனை மீட்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொருளாதார மீட்பு நடவடிக்கையாகச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு குத்தகைக்கு விடுவது, வாடகைக்கு விடுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு எந்த வித லாப நோக்கமும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்கப்படும். அந்த வருவாய் கோயில்களுக்குப் பயன்படுத்தப்படும்.
அறநிலையத்துறையில் பல ஆண்டுகளாக உள்ள காலிப்பணியிடங்களை சட்டத்திற்குட்பட்டு வெளிப்படைத்தன்மையோடு விளம்பரப்படுத்தப்பட்டு நிரப்பப்படும். 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ள திருக்கோயில் பணியாளர்கள் பணி நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும் விதிமீறல் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார்.
சிலை திருட்டு சம்பவங்களைப் பொறுத்தவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சில சிலைகள் மீட்கப்பட்டன. ஏற்கனவே திருட்டுப் போன சிலைகளில் வெளிநாடுகளில் உள்ளதைக் கண்டறிந்துள்ளோம். அதனை மீட்கவும், இதுதொடர்பான வழக்குகளை விரைவுபடுத்தவும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!