Tamilnadu

இனி தனியாரிலும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் அருமையான தகவல்!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பெருநிறுவனங்களின் நிதியுதவியுடன் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி என்ற நிலை வர வேண்டும் என்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். பெருநிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதி மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் மட்டும் 1 கோடியே 88 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை எனக்கூறிய அமைச்சர், ஒரு சில மருத்துவமனைகளில் இருந்த உபகரணங்கள் செயல்பாட்டில் குறைபாடு இருந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதான காபந்து ஆட்சியில் தான் அந்த 13 உயிர் இழப்புகள் ஏற்பட்டதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்டவை குறித்து பேரிடர் காலம் முடிந்தவுடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது போல் அடுத்ததாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Also Read: “+2 கூட தேர்ச்சி பெறாதவர் உதவி பேராசிரியரா?” : சர்ச்சையில் அண்ணாமலை பல்கலைக்கழகம்!