Tamilnadu

“தமிழ்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு கனவை நனவாக்கும் முதலமைச்சரின் மாபெரும் முயற்சி” : ‘தினகரன்’ தலையங்கம்

கடந்த தி.மு.க ஆட்சியில் தொழில்துறை அபார வளர்ச்சி பெறுவதற்கான சான்றுகள் ஏற்கனவே உள்ள நிலையில், தற்போதைய ஆட்சியிலும் அதற்கான முன்னெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது என தினகரன் தலையங்கம் தீட்டியுள்ளது.

‘தினகரன்’ நாளிதழில் வெளியான தலையங்கம் பின்வருமாறு:

ஒரு நாடு அல்லது மாநிலம் வளர்ச்சிப்பாதையில் செல்ல தொழில் சார்ந்த திட்டங்களை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில் சென்னையில் தொழில்துறை சார்பில் நடந்த முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ.28,508 கோடி முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 49 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளால், பரவல் வெகுவாக குறைந்துள்ளது. ஒருபக்கம் தொற்றை தடுக்க முழு வீச்சில் தடுப்பு பணிகள், மறுபுறம் மாநில வளர்ச்சிக்கான திட்டங்களையும் மேற்கொண்டு வருவது பாராட்டிற்குரியது.

தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே தி.மு.க அரசின் லட்சியமென சென்னை தொழில்துறை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது, இளைய தலைமுறையின் வேலைவாய்ப்பு கனவை நனவாக்கும் ஒரு மாபெரும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழலாம். முந்தைய தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொழில்துறையில் நிறைவேற்றியுள்ள திட்டங்களையே இதற்கான சாட்சியங்களாக கூறலாம். கடந்த 1996, டிசம்பரில் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் கார் தயாரிப்பு தொழிற்சாலையை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் துவக்கி வைத்தார். இவரது ஆட்சிக்காலத்தில் அதிகளவு கார் தொழிற்சாலைகளை உருவாக்கப்பட்டதால், சென்னை ‘‘ஆசியாவின் டெட்ராய்ட்’’ என அழைக்கப்பட்டது.

மேலும், சிப்காட் தொழில் வளாகங்கள், ரூ.338 கோடியில் தரமணி டைடல் பார்க் உட்பட ஏராளமான தொழிற்நுட்ப பூங்காக்களும் உருவாக்கப்பட்டன. சென்னை சோழிங்கநல்லூரில் 377.08 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டது. 2006-11 தி.மு.க ஆட்சியின்போது முன்னணி நிறுவனங்களுடன் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் 51 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் சுமார் 2.40 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சேலம் உருக்காலை, ஏசியன் பெயிண்ட் தொழிற்சாலை, மணலியில் பெட்ரோ பிராடக்ட்ஸ் தொழிற்சாலை மற்றும் மதுரை, தூத்துக்குடி உள்பட பல இடங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், தடையற்ற மின்சாரம் கிடைக்க அனல் மின் நிலையங்கள், ரூ.14,600 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ திட்டம் போன்றவையும் தி.மு.க ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த தி.மு.க ஆட்சியில் தொழில்துறை அபார வளர்ச்சிப் பெறுவதற்கான சான்றுகள் ஏற்கனவே உள்ள நிலையில், தற்போதைய ஆட்சியிலும் அதற்கான முன்னெடுப்பு பணிகள் துவங்கி உள்ளதால், முதலமைச்சர் குறிப்பிட்டது போல தெற்காசியாவில் தொழில் புரிவதற்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாறப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Also Read: “முதலீட்டாளர்கள் தமிழ்நட்டை உற்றுநோக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை” : தினத்தந்தி தலையங்கம் பாராட்டு!