Tamilnadu

எட்டு பதக்கங்களுக்கு குறி.. துப்பாக்கிச் சுடுதலில் கோலோச்ச போகும் இந்தியா ! #Olympic2021

டோக்கியோ ஒலிம்பிக் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்தியா சார்பில் 18 விதமான விளையாட்டு போட்டிகளில் மொத்தமாக 127 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். கடந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். அதற்கு முந்தைய லண்டன் ஒலிம்பிக்கில் 83 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். ஒலிம்பிக் வரலாற்றிலேயே இப்போது நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில்தான் அதிகப்படியான இந்திய வீரர்கள் பங்கேற்க போகின்றனர்.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா எத்தனை பதக்கங்களை வெல்லும்? இதுதான் பலரின் கேள்வியாகவும் உள்ளது. அதிகப்படியான வீரர்களை அனுப்புவதால் அதிக பதக்கங்களை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்தியா இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கத்தை வெல்லும் என்றும் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் Gracenotes எனும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 19 பதக்கங்களை வெல்லும். குறிப்பாக, துப்பாக்கிச்சுடுதலில் மட்டும் 8 பதக்கங்களை வெல்லும் என கணித்துள்ளது.

துப்பாக்கிச்சுடுதலில் மட்டும் எப்படி எட்டு பதக்கம் சாத்தியம்? என கேட்கலாம். துப்பாக்கிச் சுடுதலில் இந்த முறை 15 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். கடந்த ஒலிம்பிக்குகளை விட இது அதிகப்படியான எண்ணிக்கை. மேலும், இந்த 15 வீரர்களின் திறன்மிகுந்த இளைஞர்கள் பலரும் இருக்கின்றனர். காமென்வெல்த், ஆசிய போட்டிகள், உலகக்கோப்பைகள் போன்றவற்றில் அதிக பதக்கங்களை வென்றிருக்கின்றனர்.

பலரும் தங்களுடைய பிரிவில் உலகளவிலான தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கெல்லாம் முன்னேறியிருக்கின்றனர். அதனாலயே துப்பாக்கிச் சுடுதல் வீரர் வீராங்கனைகள் மீது இவ்வளவு பெரிய நம்பிக்கை உருவாகியுள்ளது. 2008 ல் அபினவ் பிந்த்ரா தங்க பதக்கத்தை வென்று கொடுத்ததை போல, இரண்டு மூன்று தங்கங்களை இவர்கள் வாங்கிக் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர் வீராங்கனைகள்:

மனு பாகர்-சௌரப் சௌத்ரி இந்த இணை பிஸ்டல் வகைமையில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் சரி தனி பிரிவிலும் சரி உறுதியாக பதக்கத்தை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இருவருக்குமே 19 வயதுதான் இளவேனில் வாலறிவன் இவர் தமிழக வீராங்கனை. உலகளவிலான தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையாக இருந்திருக்கிறார். ஏர் ரைஃபிள் வகைமையில் தனிப்பிரிவிலும் திவ்யான்ஷ் சிங் பன்வாருடன் கலப்பு இரட்டையர் பிரிவிலும் பங்கேற்க இருக்கும் இவர் இரண்டிலும் பதக்கம் வெல்ல வாய்ப்பிருக்கிறது.

அபிஷேக் வெர்மா இவர் 27 வயதில் பயிற்சியை தொடங்கு கிடுகிடுவென உயர்ந்து உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தவர். பிஸ்டல் பிரிவில் இவரும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. யாஷஸ்வினி தேஷ்வால் எனும் வீராங்கனையும் பிஸ்டல் பிரிவில் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பே துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாதான் கோலோச்ச போகிறதென்பது முடிவாகியுள்ளது.

-உ.ஸ்ரீ

Also Read: வரலாற்றில் முதல் முறை... ஒலிம்பிக்கில் இந்தியாவின் பெருமையாகத் திகழும் தமிழ்நாட்டு வீராங்கனைகள்!