Tamilnadu
ஒன்றல்ல; 1.76 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு.. வாக்குறுதிக்கு ஏற்ப சொன்னதைச் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 22,2021) தலையங்கம் வருமாறு: -
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்னால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க தலைமையும் பா.ஜ.க. தலைமையும் ஒரே பல்லவியைப்பாடிக் கொண்டு இருக்கிறது.
பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க.! ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் தொடர்ந்து வருகிறது பா.ஜ.க.! இருவரும் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இத்தனை ஆண்டுகள் நிறைவேற்றா தவர்கள் மட்டுமல்ல; அதனை மறந்துவிட்டவர்கள். இத்தகைய தப்பான ஜோடிகள்தான், தி.மு.க அரசைப் பார்த்துக் குறைசொல்லிக் கொக்கரிக்கின்றன.
பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு கோட்டைக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் இருந்து வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனைப் பட்டியலிடுவதற்கு பக்கங்கள் காணாது. ஒரே ஒரு உதாரணம், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம். அதனை மட்டும் எடுத்துப் பார்க்குமாறு அந்த இரண்டு கட்சிகளிலும் இருக்கும் படிக்கத் தெரிந்தவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!
ஒன்றல்ல; ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோரிக்கைகள் அந்தத் திட்டத்தின் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் அந்த மக்களை, நேரிலேயே போய்க் கேட்டுக்கொள்ளலாம்.
“ உங்கள் கவலைகளை -
உங்களது கோரிக்கைகளை-
உங்களது எதிர்பார்ப்புகளை -
என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்” - என்று சொன்னார் தளபதி மு.க.ஸ்டாலின். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினாக 1.76 லட்சம் கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார்.
கடந்த ஜனவரி 25 ஆம் தேதி காலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் முன்னால் அவர் ஒரு சபதம் எடுத்தார். “மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”. - இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் அளித்த உறுதிமொழி! அந்த உறுதிமொழியின்படி அமைக்கப்பட்ட முதல் நிகழ்ச்சியை திருவண்ணாமலையில் இருந்து தொடங்கினார். ‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்!' - என்ற வாக்குறுதிக்கு ஏற்ப சொன்னதைச் செய்தார்.
“வீட்டில் நான்கு குழந்தை இருந்தால் மெலிந்த குழந்தை மீதுதான் பெற்றோருக்கு அன்பு இருக்கும். அதைப் போலத்தான் மெலிந்த குழந்தைகளை முன்னேற்ற நினைக்கிறேன்” - என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்.
அந்த அடிப்படையில் 1.76 லட்சம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு முழுவதும் தன்னிடம் தரப்பட்ட கோரிக்கை மனுக்களை நிறைவேற்றுவதற்கு தனித் துறையை அமைத்தார். அதற்கான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். அவருக்குக் கீழே ஊழியர்கள் அமர்த்தப்பட்டார்கள். அனைத்து மனுக்களும் பிரித்தெடுக்கப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படிப்படியாக அடுத்த வாரத்தில் இருந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனித்துறை தொடங்கப்பட்ட 70 நாட்களில் இதுவரை 1.76 லட்சம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களின் சராசரி எண்ணிக்கையைவிட ஒரு லட்சத்து 10 ஆயிரம் கூடுதலாகும். அ.தி.மு.க எந்த லட்சணத்தில் ஆண்டிருக்கிறது என்று தெரிகிறதா?
இதுவரையில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 486 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 268 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மின் பகிர் மானக்கழகம், உள்துறை என அனைத்துத் துறைகளுக்கும் இம்மனுக்கள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் 2100 பேர் மனுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் 986 மனுக்கள் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் திறந்த மனத்தோடு அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமைகள் உற்று நோக்க வேண்டும். ‘முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்கள் அனைத்தையும் அ.தி.மு.க ஆட்சி மதிக்கவே இல்லை. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா தொலைபேசியில் கோரிக்கைகளை சொல்லலாம் என்று அறிவித்தார்.
அது ஐந்து ஆண்டுகளாகச் செயல்படவே இல்லை. தி.மு.க தலைவர் இத்தகைய முன்னெடுப்புகளைச் செய்ததும் பழனிசாமி, நானும் செயல்படப் போகிறேன் என்று ஒரு எண்ணை அறிவித்தார். அதாவது, ஜெயலலிதா தொடங்கிய திட்டம் என்றே தெரியாமல் அறிவித்தார். அதுவும் செயல்படவில்லை. மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. மொத்தத்தில் அவர்கள் ஆட்சியும் நடத்தவில்லை.
இத்தகைய பழனிசாமியின் பம்மாத்துக் கூட்டத்துக்கு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் செயல்பாடுகளைப் பார்த்தால் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் தான் இருக்கும். மக்களின் முதலமைச்சர் எப்படிச் செயல் பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர். அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கக்கூட யோக்கியதை இல்லாதவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!