Tamilnadu
மின் வாரிய ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீடு.. இம்மாதம் முதல் அமல்.. அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
மின்வாரிய ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மின் வாரிய ஊழியர்களுக்கும் நீட்டித்து, ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், மீண்டும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இந்த ஆண்டு ஜூலை முதல் வரும் 2025-ம் ஆண்டு ஜூன் 30-ம்தேதி வரை 4 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த காப்பீட்டுத் திட்டம் மின் வாரிய ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படும். இத்திட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (டான்டிரான்ஸ்கோ), தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இந்த நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெறலாம். அரிய வகை நோய்களுக்கு, அதாவது அரசால் பட்டியலிடப்பட்ட சிகிச்சைகளை ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் மேற்கொள்ளலாம்.
கண்புரை அறுவை சிகிச்சைக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம், கர்ப்பப்பை அகற்றும் அறுவைசிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டான்ஜெட்கோ நிறுவனம் ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.3,240-ஐ பிரீமியமாக செலுத்துகிறது. இதற்காக பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் இரு பிரிவாக ரூ.285 மற்றும் ரூ.5 என ரூ.300 பிடித்தம் செய்யப்படும்.
இதில் ரூ.5 என்பது நிதியமாக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5.60 கோடி சேகரிக்கப்படுகிறது. இந்தத் தொகை மூலம் மிகவும் அரிதான சிலநோய்களுக்கு சிகிச்சை பெற ரூ.20 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து உயர்நிலைக் குழு முடிவெடுக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் மின் துறைப் பணியாளர்களாக இருந்தால், இருவரில் இளையவரிடமிருந்து பணியாளர் பங்களிப்பு பெறப்படும்.
தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்தம், மறு பணியமர்த்தல், தற்காலிகப் பணி உள்ளிட்ட திட்டங்களின்கீழ் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.
காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசர அடிப்படையில் சிகிச்சை மேற்கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !