Tamilnadu

தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை: காலநிலை மாற்றத்தை உணர்ந்து செயல்பட முதல்வர் அறிவுறுத்தல்!

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறைகளில் தொலைநோக்குடன் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (22.7.2021) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மரம் நடுதல் திட்டத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், மனிதர்கள், வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களை கட்டுப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

வனப்பாதுகாப்பை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் உள்ள மூன்று உயிர்க்கோள் காப்பகங்கள், நீலகிரி உயிர்க்கோள் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் மலை உயிர்க்கோள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்திடவும், சிறந்த முறையில் பராமரித்திடவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வன உயிரின சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் போன்ற பாதுகாப்பு வனப்பகுதிகளில் உள்ள வன உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும், விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்தும், வனக்குற்றங்களை தடுத்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்தும், இந்தப் பாதிப்புகளை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள், தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் இளையதலைமுறையினரை சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக அளவு ஈடுபடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தொழிற்சாலைகள் மூலம் நீர், நிலம், காற்று மாசுபடுதலை தடுப்பது, குறைப்பது, கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அசோக் உபரேதி, இ.வ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் சிறப்புச் செயலாளர் முனைவர் எம். ஜெயந்தி, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ். இ.வ.ப., வனத்துறை சிறப்பு செயலாளர் கே.ராஜ்குமார், இ.வ.ப., சுற்றுச்சூழல் துறை இயக்குநர் திருமதி.பொ. ராஜேஸ்வரி, இ.வ.ப., தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்

Also Read: செயற்கை பண்ணைக்குட்டை மூலம் விவசாயத்தில் சாதிக்கும் உசிலம்பட்டி சகோதரர்கள்... குவியும் பாராட்டு!